இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஜூலை, 2021

வேலுநாயக்கர் கழுவாத புறாக்களின் எச்சம்

 வேலுநாயக்கர் கழுவாத புறாக்களின் எச்சம்


சமாதானங்களை நான் வெறுக்கிறேன் 

அதற்குமுன் நான் சமாதான புறாக்களை வெறுத்தேன்

ஆதிமுதலில் புறாக்களை 


குடியிருப்பு ஜன்னல்கள் எங்கும் 

புறாக்களின் எச்சங்கள் வியாப்பித்திருக்கின்றன 

வேலுநாயக்கர் புறாக்களுக்கு தானியம் இட்டார்

அதைத் தின்று கழிந்த எச்சங்களைக் கழுவியது யார்

செல்வமா...

அய்யரா... 


நீங்கிச்சென்றபின்னும் நிலைகொண்டிருப்பது 

நல்லோர் நினைவுகள் மட்டுமல்ல 

புறாவின் எச்சமும்

அதன் நாற்றமும்

இறகும்...


பிரமிள் சிலாகித்த

பறவையிலிருந்து பிரிந்த இறகு

அவர் வீட்டு முற்றத்தில் விழுந்திருக்க வாய்பில்லை


புறாக்களின் மொழி

எதையோ சொல்ல வந்து,

பின் ‘ஒன்றுமில்லை’ என்பதைப்போல ஒரு சத்தம் எரிச்சலூட்டுகிறது


அதன் கண்களில் 

மகிழ்ச்சியில்லை 

கருணையில்லை 

நிம்மதியில்லை...

எப்போதும் நிலைகொண்டுள்ள கலவரம் மட்டுமே 


கருப்பும் இல்லை 

வெளுப்பும் இல்லாதொரு சாம்பல் புறா

தனது முதுகில் போடப்பட்ட 

அழகிய இரு கோடுகள் பற்றி 

எந்த பிரக்ஞையும் இல்லை அதற்கு


புறாக்களின் மாமிசம் அத்தனை உவப்பானதாக இல்லை

புறாக்களின் எச்சம் மணப்பதில்லை

புறாக்களிடம் தியாகம் இல்லை...

நான் புறாக்களை வெறுக்கிறேன்


ஒரு சாப்பாட்டு மேசையின் மீது

அத்தனை அமைதியாக அமர்ந்திருக்கும்

அந்த கோழியைப் பார்க்கிறேன்

அதன் தியாகத்தை எண்ணி மனமுருகுகிறேன்

அதற்காக பிராத்தித்து 

காற்றில் சிலுவையிட்டு 

ஆமென் சொல்கிறேன்


ஒரு கோழியை சமாதானத்தின் சின்னமாக

அறிவிகாதவனின்

அறிவீனத்தை எண்ணி சபிக்கிறேன்.