நாம் பேசத்தொடங்கியிருந்த நாட்களில்…
முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்
அது ஒரு கோழிறகின் மேல்
காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !
பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…
அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை
மாறாக அவை அலுப்பைத் தருவதாக கூறினாய் !
பிறகு என்னைப் பற்றி பேசினோம்…
அவை ஒரு சாம்பல் நிற பூமியின்
புதினமென நம்பினாய் !
அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…
ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்
பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !
தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…
பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய
பேச்சுக்கள் தவிற்க முடியாததாகின !
எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்
மௌனம் நம் மத்தியில்
நாற்காலியிட்டு அமந்துகொண்டது !
பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…
அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்
வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடந்தோம் !
பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…
இதுவரை பேசியவை எல்லாம்
சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்த து !
பின்நாட்களில்…
யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்
நாம் முன்பு எப்போதையும்விட
மிகவும் கவனத்துடன் இருந்தோம் !