இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 அக்டோபர், 2016

தீபன் - புலம்பெயர் சினிமா

வெளிநாடுகளுக்கு பயனம் செல்லும் போது நமது நாட்டவர்களைக் காண நேரிடும். அதுவும் சில பகுதிகள் முழுக்கவே தமிழர்களாக காட்சியளிப்பார்கள். லண்டனில் ஈஸ்ட்-ஹேம், க்ராய்டன், பரீசில் லா ஷாப்பெல். பரீஸின் பிரத்யேகதை என்னவென்றால் அங்கு இந்திய தமிழர்களான பாண்டிச்சேரிக்காரர்களும் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் ஆழமானதொரு தமிழ் கலாச்சார சூழல் லா ஷாப்பெல் அமைந்திருப்பதைக் காணலாம். கோயில் திருவிழாக்கள், வியாபார கூட்டமைப்புகள், தொழில்முறைப் போட்டிகள் கொடுகல் வாங்கல், சாயங்காலம் பல கடைகளில் பணிபுரிவோர் சேரும் டீக்கடைகள் எல்லாம், தாயகத்திலிருந்து வெகுதூரம் விலகிச்செல்லா தன்மையுடன் இருக்கும்
கார்-த்யு-நோர் தொடங்கி ஏரோபோர்டைச் சுற்றி பல சிறு சிறு கிராமங்களில், சிரிய, பெரிய வீடுகளை வாங்கி தமிழாக்கள் வசிக்கிறார்கள். அதுக்குள்ளாகவே சிரிய தொழில்கள் செய்து, அந்த தமிழ் குழுக்களுக்குள்ளாகவே பிழைப்புகள் நடத்தி வாழ்கிறார்கள். இதில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு உதவிப்பணம் வாங்கி ஜீவிக்கும் பெரியவர்கள், கள்ள விசாவில் திரிபவர்கள், நிரந்திர தொழிலென்று ஏதும் இல்லாமல் சின்னச் சின்ன வேலைகளையே பல வருடங்களாக செய்பவர்கள். இவர்களது சடங்குகள், பெண்பார்த்தல், பெண்கொடுத்தல் எடுத்தல்...என்று அந்நிய தேசமொன்றில் ஒரு இனம் தனது வேர்களை முழுமையாக பற்றவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் வாழ்வதை ஒரு அந்நியனாக நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்
அப்போது எனக்குள் எழும் கேள்வி இதுதான்...இவ்வளவு உயிர்ப்புடனான ஒரு புலம்பெயர் கலாச்சாரத்திலிருந்து அதன் வெளிப்பாடாக இலக்கியத்தளத்திலும், கலைத்தளத்திலும் எவ்வகையான பங்களிப்புகள் நடந்திருக்கின்றன? (அப்படி நான் தேடியபோது கண்டெடுத்தது தான் ஷோபாசக்தியின் சிறுகதை உலகம். தேசத்துரோகி சிறுகதைத் தொகுப்பை நான் வாசிக்கத் தொடங்கி இருந்தேன்). நான் மிகவும் மதிக்கிற மற்றுமொரு கலைவடிவம் சினிமா. திரைத்துறையில் ஏதாவது முன்னெடுப்புகள் புலம்பெயர்த் தமிழர்களை வைத்து முன்னெடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். இலங்கையில் தமிழ்சினிமா என்ற ஒன்று இருந்திருக்கிறதா? என்றெல்லாம் தேடிப்பார்க்கத் தோன்றியது
நான் சில இலங்கைத்தமிழ் இளைஞ்சர்களுடன் பேசும்போதும் சரி, வெறுமனே அவர்கள் பேசுவதை அவதானிக்கும் போதும் கவனித்த ஒரு விஷயம் அவர்கள் இந்தியதமிழர்களாகிய நம்மைவிட இந்தியதமிழ் சினிமாவை நேசிக்கிறார்கள். திரும்பத் திரும்ப பிடித்த படங்களைப் பார்க்கிரார்கள். சினிமா பற்றி நம்மைப்போலவே கதைக்கிறார்கள், அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களுக்கு எல்லா நடிகைகளையும் தெரிந்திருக்கிறது. முடிதிருத்தகங்களில் அஜித் படங்கள் காட்சியளிக்கின்றனநாம் 'மொக்கை' என்று ஒதுக்கிய படங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்காமல் கண்டு களிக்கிறார்கள். சினிமா வசனங்களை அடிக்கடி உபயோகிக்கிறார்கள்.... "அந்த கவுண்டமணி சொல்லுவான்ல..." "வடிவேலு சொல்லுற மாதிரி..." என்று
லா ஷாப்பெலில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சில பழைய புத்தகங்களை மேலாக‌ அலசிக்கொண்டிருந்த போது, ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அது "இலங்கைத் தமிழ் சினிமா" குறித்த புத்தகம். இலங்கைத் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை, முக்கிய நடிகர்கள், குறிப்பிடும்படியான திரைப்படங்கள் என, ஒரு சில புகைப்படங்களுடன் இருந்தது. மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட இந்திய தமிழ்சினிமா நீரோட்டத்தின் கூடவே இணைகோடாக இலங்கைத் தமிழ்சினிமா பயணிக்கத் தொடங்கி இடையே வற்றி உலர்ந்து காணாமல் போன நதி அது. மொத்தமாகவே 50 படங்களுக்கும் குறைவான படங்களே அங்கு தயாரிக்கப்பட்டதாக இணையத் தகவல்கள் சொல்லுகின்றன. தொடர்ந்த போராட்டமும் அலைக்கழிப்பும் நாட்டிலிருந்து தொடர்ந்து வெளியேறும் சூழலும் அரசியல் நிலையற்றத்தன்மையும் அங்கு சினிமாவைக் கைவிடச் செய்ததோ என்னவோ? 
ஆனால் இக்கட்டான அழுத்தங்களில் தான் படைப்பூக்க எழுச்சியும் அதிகமாக இருக்கும். உன்னதமான கலைப்படைப்புகள் பெரும்பாலும் உள்ளார்ந்த மனஎழுச்சியின் காரணமாக விளைந்தவையாகவே இருக்கும். அப்படியிருக்க இலங்கையில் சினிமா முன்னெடுப்பு தோய்வடைந்ததைக் குறித்து எனக்கு மிகவும் வருத்தம் உண்டு. அதுவும், சிங்கள சினிமா என்ற ஒன்று நடைமுறையில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளும் போது நமக்கான பதில் எளிதாக கிடைத்துவிடும். இருந்தபோதும் கிட்டத்தட்ட 2 தலைமுறைக்கும் மேலாக இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்துவருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். சில நகரங்களில் தொழில்ரீதியாக மிகுந்த செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப்படியிருந்தும் பெரியளவிலான கலாரீதியான முன்னெடுப்புகள் எதுவும் நிகழப்பெறவில்லை என்றே தோன்றுகிறது. 
தாய்நாட்டில் தினந்தோறும் நிகழும், நிகழ்ந்த விடயங்கள் ஒருபுறம் என்றால், புலம்பெயர் சமூகத்தில் அவர்கள் தினசரி எதிர்கொள்ளும் சமுதாய சிக்கல்கள், கலாச்சார அபத்தங்கள், அவர்கள் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பிழைபில்லாவிட்டாலும் சுமந்துகொண்டு திரியும் பழமைவாதங்கள், புலம்பெயர் நாட்டின் சட்டதிட்டங்களை தனக்கு சாதகமாக தனக்கு இயங்க வைக்கும் ஆட்கள், அதன்பொருட்டு அவர்கள் செலுத்தும் ஆதிக்கம், இரண்டாம் தலைமுறைகள் படித்து வேலை என்று ஏற்பட்ட பிறகு உள்ளூர் கலாச்சாரத்துடன் தங்களை சங்கமித்துக்கொள்வது, பின் ஒருங்கிணைந்த இந்த கூட்டு வாழ்வை விட்டு தூர நகரங்களுக்கு பிரக்ஞைப் பூர்வமாக இடம்பெயர்ந்டு போதல்....இப்படி எவ்வளவோ விஷயங்கள் எழுதப்படவும், பேசப்படவும், திரைப்படங்களாக எடுக்கப்படவும் சாத்தியம் இருக்கும் பட்சத்தில் ஏன் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று நான் நினைப்பதுண்டு.
ஒரு முறை லாஷப்பலில் ஒருமுறை சுற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த போஸ்டரைக் கண்டேன். யாருடைய முகமும் இல்லை. இரண்டு கைகளை பாதுகக்கும் இன்னொரு கை. ஒரு கசங்கிய பழைய ஓவர்கோட்டின் பின்னனியில். படத்தின் பெயர்  'தீபன்' என்று பார்த்ததுமே...ஆஹா..! என்று ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இயக்கம் ஜாக் ஒடியார் (jaques audiard). படம் திரைக்கு வரும்போது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

(...தொடரும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக