இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 அக்டோபர், 2007

கடை அடைக்கும் நேரம் வரை - Merle Haggard

"Here's a man who writes about his own life and has had a life to write about."
~ Johnny Cash (a rival and inspiration for Merle Haggard )

"I'll tell you what the public likes more than anything...
it's the most rare commodity in the world - honesty."
~ Merle Haggard




"LEGEND என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் மெர்ல் ஹகர்டை பற்றி பேசும்போது தான் பொருள்படும்படியாக இருக்கிறது" என்று இவருடைய புகழைக் குறிப்பிடுகிறார்கள். சாமான்யர்களின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்ட, கன்ட்ரி இசையின் தன்னிகரற்ற இசைக்கலைஞர் ஹகர்ட்.
தான் பார்ப்பது,கேட்பது உணர்வது அனைத்தையும் இசையாய் மாற்றக்கூடிய மாயக்கரம் படைத்தவராக இருந்தார் ஹகர்ட். அவர் இசைத்தது வாழ்க்கையைத்தவிர ஒன்றும் இல்லை. அவரது பாடல்கள் மக்களிடம் ஒரு தேசியகீதத்தைப் போல புகழ்பெற்றிருந்ததற்கு காரணம், அவற்றில் இருந்த உண்மையும் நேர்மையும். அதன் காரணமாக தொடர்ந்து இசைப்பட்டியல்களில் ஆதிக்கம் செலுத்த அவரால் முடிந்தது. ஒரு ஊரே வெறுக்கும் போக்கிரியாக தனது கால்த்தைத் துடங்கி, யாராலும் மறுக்க முடியாத காலத்தின் நாயகனாக, ஒரு சரித்திரவாழ்வை வாழ்ந்தவர் ஹகர்ட்.
அமரிக்காவின் பெரும் பொருளாதாரப் பின்னடைவின் போது ஹகார்ட் குடும்பம் கலிஃபொர்னியாவில் புலம்பெயர்ந்தது. மேர்ல் ஹகர்ட் 9 வயது இருந்தபோது தன் தந்தையைப் பறிகொடுத்தார். மிகவும் அடங்காப்பிடாரியாக இருந்த சிறுவன் ஹகர்டை சமாளிக்க முடியாமல் சிறுவர் காப்பகதிற்கு அனுப்பிவிட்டார் அவரது தாய். அப்போது அவரது சகோதரர் கொடுத்த சிறிய கித்தாரை வைத்து அவரே வாசிக்கக் கற்றுக்கொண்டார். அங்கிருந்து தனது நண்பனுடன் டெக்சாசுக்கு தப்பியோடி, அதே வருடம் போலீசாரால் திருட்டு குற்றச்சாட்டுக்கு கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்தும் தப்பியோடி உள்ளூர் மதுவிடுதிகளில் பாடல்கள் இசைக்கத் துடங்கினார். அதைத் தொடர்ந்து லெப்டி பிரசல் என்னும் உள்ளூர் கன்ட்ரி பாடகர் அவரது கச்சேரியில் பாட ஹகர்டுக்கு வாய்பளித்தார். கம்பீரமான குரல்வளமும் குதூகலமும் நிறைந்து பாடும் அந்த இளைஞனின் பாடலை ரசிகர்கள் வரவேற்றார்கள். உள்ளூரில் சற்று புகழ் கிடைத்த போதும் அவரது பணப் பிரச்சனை அவரைத் துரத்தியவண்ணம் இருந்தது. 1957ல்
கொள்ளைக்குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஹகர்ட் சிறையிலும் சூதாட்டம், கேளிக்கை என்று தான் இருந்தார். அப்போது சிறைகளில் சென்று நிகழ்ச்சிகள் நடத்திவந்த பிரபல கன்ட்ரி பாடகர் ஜானி கேஷ் ஒருமுறை சான் குவன்டின் சிறையில் நடத்திய 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ஹகர்டு. ஒருமுறை அவருடைய சகசிறைவாசியும் நண்பனுமான ராப்பிட் சிறையிலிருந்து தப்பியோட திட்டமிட்ட போது, ஹகர்டை " நீ என்னுடன் வரவேண்டாம்...உணக்கு இசையில் பெரிய எதிர்காலம் இருக்கிறது,நீ உலகுக்கு தெரிய வேண்டியவன்.என்னுடன் வந்தால் நீ ஓடி ஓடி ஒளியவேண்டியிருக்கும் " என்று மறுத்துவிட்டான். தன்னுடன் இருந்த சிறைவாசி செஸ்மேனின்
மரணமும், ராப்பிட்டின் வாக்கும் அவருள் பாதிப்பை ஏற்படுத்தியது. சிறையிலேயே டிப்ளமோ படிக்கத்துடங்கினார், சிறை மில்லில் கடுமையாக உழைத்தார், கேஷால் கவரப்பட்டு தொடர்ந்து இசைப்பயிற்ச்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் சிறையின் இசைக்குழுவிலும் பாடத்துவங்கியிருந்தார்.

அவரது உழைப்பு வீண்போகவில்லை. 1960ல் அவர் விடுதலை செய்யப்பட்டு அவரது குற்றங்களுக்கு மண்ணிப்பு வழங்கப்பட்டது. விடுதலையானபின் தான் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு 4 மாதங்கள் ஆனது என்றும். சில சமையம் ஏதாவது செய்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விடலாம் என்று தோன்றும் என்றும், அதைப்போல தனிமையான காலத்தை தான் கண்டதே இல்லை என்றும் தனது அனுபவதைக் கூறுகிறார். 1960ல் எதேச்சையாக பதிவு செய்யப்பட்ட அவர் பாடிய‌ 'Sing a sad song' என்ற பாடல் அவ்வருடம் National Hit ஆனது.

1966ல் Swinging Doors வெளியாகியிருந்த போது கன்ட்ரி இசையின் நாயகனாக மாறியிருந்தார் ஹகர்ட். சில வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை கேஷை சந்தித்த ஹகர்டு "சான் குவன்டின் சிறையில் உங்கள் நிகழ்ச்சியை நான் வெகுவாக ரசித்தேன்" என்றார். கேஷ் "உங்களை அபோது என் குழுவில் நான் பார்த்ததில்லையே" என்றார். ஹகர்டு அதற்கு "நான் அப்போது பார்வையாளனாக இருந்தேன்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். இந்த சம்பவம் நடக்கும் போது மெர்ல் ஹகர்ட் என்னும் பாடகர் அதிகமாக விற்றுக்கொண்டிருந்த ஆல்பங்களுக்கும், மக்களின் அன்பிற்குரிய இசைஞனாக மாறியிருந்தார். ஒரு காலகட்டத்தில் கேஷின் பாடல்களை விட இவரது இசை ஆல்பங்கள் பிரபலமாக விற்கத்துடங்கின. ஒரு முறை கேஷின் நண்பரான ஜனாதிபதி நிக்ஸனின் மாளிகையில் ஹகர்டின் ஒரு பாடலை விரும்பி இசைக்கச் சொல்லி கேட்ட போது அதை மறுத்துவிட்டார் கேஷ்.

கலிஃபொர்னியாவின் கவர்னராக இருந்த Ronald Regan, 1972 ன் சிறந்த மனிதராக அறிவிக்கப்பட்டார் ஹகர்ட். இதைக்குறித்து குறிப்பிடும் போது 'மிக சிலரே ஒரு 10 வருட இடைவெளியில் ஒன்னாந்தர காளிப்பயல் என்றும் மிகச்சிறந்த‌ கனவான் என்றும் அங்கீகாரம் பெறமுடியும் என்றும் கேலியாக சொன்னார். அவருடைய பல பாடல்கள் மக்களிடையே தேசியப்பண் போல புழக்கத்தில் இருந்தது. பெரும்பாலும் ஹகர்டின் பாடல்கள் சிறை, துரோகம்,
குடியும், கூத்தும், சுற்றியலைதலும் பற்றியதாகவே இருக்கும். அவரது 'If we make it through December' என்ற பாடல் இன்றளவும் உழைப்பாளி வர்கத்தின் நிலைப்பாட்டை விவரிக்கும் பாடலாக கொண்டாடுகிறார்கள். அதனாலேயே எளிய மக்களின் இஷ்ட நாயகனாக கருதப்பட்டார் ஹகர்ட்.

அதுவே அவருக்கு கடைசி குறிப்பிடத்தக்க வெற்றிப்பாடலாகவும் அமைந்தது. பின்னால் வந்த இசைக்கலைஞர்களுக்கு வழிவிட்டு இந்த ஜாம்பவான் சுவடுகள் இல்லாமல் பறக்கும் ஒரு பறவையைப்போல விலகிச்சென்றார். இன்னும் சிறு இசைக்கச்சேரிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கல்ந்துகொள்கிறார். ஜானி கேஷ் நடத்திவந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
கேஷே ஹகர்டை பேட்டிகண்டு, இருவரும் சேர்ந்து அந்நிகழ்ச்சியின் இறுதிப்பாடலைப் பாடியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி.
அவரது Swinging Doors எனும் இந்தபாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதையே எனது செல்பேசி அழைப்பு மணியாகவும் வைத்துள்ளேன். சிறுபிள்ளைத்தனமான ஒரு குடிகாரனின் காதலை வெளிப்படுத்தும் பாடல் இது. தனது மனைவியை கோபித்துக்கொண்டு, இனி வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அவன், வழிப்போக்கர்களை தன்னைப் பார்த்து செல்லும்படி பாடுகிறான். அவர்கள் தனது மனைவியிடம் தான் இருக்கும் இடத்தை சொல்வார்கள் என்றும், அவள் வந்து தன்னை அழைத்து செல்வாள் என்ற நம்பிக்கையுடனும் அவன் பாடும் பாடல் இதோ.

கடை அடைக்கும் நேரம் வரை

இப்ப‌டிப்ப‌ட்ட‌ புகை படிந்த பழைய மதுவிடுதி என‌க்கு ப‌ழ‌க்க‌மில்லை
நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன்... க‌ண்ணே
உன்னை ச‌ந்தோஷ‌மாய் பார்ப‌த‌ற்கே

நான் எங்கு இருக்கிறேன் என்று
நீ அறிய‌வே உன்னை அழைத்தேன் அன்பே
பாவ‌ம் நீ என்னைத் தேட‌ப்போகிறாய்
பெரிதாக‌ ஒன்றும் இல்லை கண்மணி...
ஆனாலும் என்னை இவ்விட‌ம் வ‌ரவேற்ப‌தாக‌வே உண‌ர்கிறேன்

இங்கு என‌க்கொரு விசைக்க‌த‌வும்,இசைப்பெட்டியும் ம‌துமேசையும் உள்ளது
என் இந்த புதிய வீட்டில்
மின்னும் நியான் விளக்குகளும் உள்ளது என் அன்பே
பாதசாரிகளே...சற்று நின்று என்னை கவனித்து செல்லுங்கள்
நான் கடை அடைக்கும் வரை இங்குதான் இருக்கிறேன்

எனக்கு கேளிக்கையான எல்ல‌மும் இங்கு உள்ள‌து
என்னை ம‌தியிழ‌க்க‌ செய்யும் எல்லாம்
இதோ இங்கு தான் உள்ள‌து
ம‌ற்றும் இந்த‌ சூழ‌ல் என‌க்கு மார‌டைப்பு வ‌ருவ‌த‌ற்கு
ஏற்றார்போல‌ தான் இருக்கிற‌து
உன‌க்கு தான் ந‌ன்றி சொல்ல‌ வேண்டும் அன்பே

இறுதியில் உன‌க்கு ஒன்று சொல்கிறேன்
நான் க‌டைய‌டைகும் வ‌ரை இங்கு தான் இருப்பேன்
இங்கு என‌க்கொரு விசைக்க‌த‌வும், இசைப்பெட்டியும் ம‌துமேசையும் உள்ளது
என் இந்த புதிய வீட்டில்
மின்னும் நியான் விளக்குகளும் உள்ளது என் அன்பே
பாதசாரிகளே சற்று நின்று என்னை கவனித்து செல்லுங்கள்
நான் கடை அடைக்கும் வரை இங்குதான் இருக்கிறேன்

[ஹகர்டும்கூட‌ ஆரம்பகாலங்களில் பாரில் பாடுகையில் தனக்கு குடிக்க தேவையான அளவு காசு சேர்ந்தவுடன் பாடலை நிறுத்திவிட்டு அங்கேயே உட்கார்ந்து குடிக்கத்துடங்கிவிடுவார்.]



பின்னாளில் டிக்ஸி சிக்ஸ் கன்ட்ரி குழுவின் 'Long time gone' என்னும் பாடலில்
"We listen to the radio to hear whats cookin
But the music aint got no soul
Now they sound tired but they dont sound haggard
Theyve got money but they dont have cash
They got junior but they dont have hank"

என்று இந்த இருவரின் புகழைப் பாடுகிறார்கள்.
கன்ட்ரி பாடல்களின் எளிமையே அதன் பலம். எளிதாக மக்களை சென்றடைவதற்கு அவர்களது மொழியில் தான் பேச வேண்டும். "அற்றைத்திங்கள் அந்நிலவில் நெற்றிக்கறழ நீர் வடிய ஒற்றைப் பார்வை பார்த்ததும் நீயா" யாருக்கு வேண்டும். கன்ரிப் பாடல்களில் அவர்களது பாடு பொருள் மிக எளிமையானதாக இருக்கிறது. மிகச்சிறிய சந்தோஷங்கள், சின்ன முட்டாள்த்தனங்கள் அவர்கள் பாடல் பாட போதுமானதாக இருக்கிறது. நம் கவிஞர்கள் கேட்பது போல ஜன்னல் நிலவு தேவையில்லை, ஒருதுண்டு வானம் தேவையில்லை, வானவில்லின் கீற்று தேவையில்லை, கவிதைமகளின் கடைக்கண் பார்வை தேவையில்லை.

புத்தகங்களில் படிக்கும் சில கதைகளை விட சிலரது வாழ்கை சாகசமும், கற்பதற்கு நிறைய பாடங்களையும் கொண்டு அமைந்திருக்கிறது.
வாழ்வின் ஒழுங்கற்ற தன்மையையும், மனிதர்களை அது தன் விருபத்திற்கு ஏற்றார்போல வளைத்துக்கொள்கிற விசித்திரத்தையும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் இந்த இருவர். இவர்கள்
மறைந்தாலும் இவர்களது பாடல்கள் அவர்களது வாழ்கையை பறைசாற்றிக்கொண்டு தானிருக்கும்.
உண்மையில் இசை என்பது இவர்கள் பாடியதா இல்லை வாழ்ந்ததா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
ஆமாம்...இசை என்பது வெறும் ஒலி மட்டும் தானா என்ன‌?