இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜூலை, 2009

பிறப்பறுப்பவன் கதை


கவிழும் இருள்:

கிழக்கு விழுந்திருந்து இருள் போத்த ஆரம்பித்திருந்தது. மருத்துவர் ஒரு டார்ச் வெளிச்சம் கொண்டு அந்த கைதியின் கண்களை நோட்டமிடுகிறார். நீண்ட நேரம் பார்க்க முடியாதவராக கண்களை விலக்கிக்கொண்டார். அவனது கண்களில் மரணம் தெரிந்தது. அவனது எடை பார்க்கப் பட்டது. அவனது அதே எடை இருப்பது போல ஒரு கல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தூரத்திலிருந்த அந்த தொழிலாளி அந்த கல்லையும், பாபஜீவியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவனது விரல்களும் உதடுகளும் ஏதோ சூத்திரங்களை கணக்கிட்டபடி இருந்தன. அவன் சற்றே குள்ளமானவனாக இருந்தான், அதிக எடையும் இல்லாதவனாகவும் இருந்தான். தொழிலாளி உதவியாளனுக்க்கு ஜாடை காட்ட, ஏதோ புரிந்துகொண்டவனைப்போல உதவியாளன் கவனமாக திரிக்கப்பட்ட கயிற்றை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விலக்கிப் போனான்.

ஆள் கனமில்லை, முடிச்சு உயரம் அதிகமாக போடப்பட்டது. உயரம் சராசரி தான், தலை கண்டிப்பாக குழிக்குள் போய்விடும். உயரமான ஆளாக இருப்பின், முடிச்சு குழிக்கு மேலே விழுந்து மார்புப் பகுதி வெளிப்படும். சரியாக முடிச்சு விழாதபட்சத்தில் அவன் துடிதுடித்துக்கொண்டிருப்பதைக் காண நேரிடலாம். ஆனால் இப்போது அது ஏதும் நடக்க வாய்பில்லை. ஏழு வரிசைகளின் சரடுக்கு மேல் முடிச்சு வந்து நின்றிருந்தது. இறுக்கமாக திரிக்கப்பட்ட அந்த கயிற்றில் நெய்யும், குழைத்த வாழைப்பழங்களும் தேய்க்கப்பட்டது. ஒரு மலரைத் தொடுப்பதின் நேர்த்தியுடன் அந்த தொழிலாளி எல்லா வேலைகளையும் கவனமாக மேற்கொண்டார்.

மரணம் விழும்போது பாபஜீவி எந்தவித வலியுமின்றி அந்த நொடியே மரணம் சம்பவிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தான் தொழிலாளி. மரணத்தை சிருஷ்டிக்கும் அவன் கைகள் நடுக்கமற்றதாகவும், பேரன்பு கொண்டதாகவும் இருந்தது. அந்த எடைக்கல் மரணப்பலகையின் மேல் வைக்கப்பட்டது. கயிற்றின் ஒரு முனைஅதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. தொழிலாளியின் கண்ண‌சைவில் லிவர் விலக்கப்பட்டு, யாரும் கவனிக்கும் முன்பு பலகையின் மேலிருந்த கல் மறைந்தது. "எல்லாம் சரியா இருக்கு!.. காலைல பாத்துக்கலாம்..!" என்றான் தொழிலாளி.

*****

காளியப்பன் 1940 -களில் பிரிடிஷ் இந்தியாவின் கீழிருந்த‌ திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி ஆராச்சார்*. பிரிடிஷ் சர்க்காரால் பல தீவிரவாதிகளும் (அல்லது சுதந்திர-போராட்ட-வீரர்கள்), குற்றசெயல் புரிந்தவர்களும் பெரும்வாரிகளில் தூக்கிலிடப்பட்டுக்கொண்டிருந்த சமயம். சமஸ்தானத்திற்கென்று ஒரு ஆராச்சாரினை நியமித்து வைத்திருந்து சர்க்கார். பெரும்பாலும் இவர்கள் முக்கிய சமூகத்தினரிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாக ஏதாவது ஒரு மூலை கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தூக்கிலிடும் 'தொழில்' மிகவும் அரிதாகவும், யாராலும் ஏற்றுக்கொள்ளப் படாததுமாக இருந்ததால், இருக்க வீடும், மாதாந்திர சம்பளமும் ஒவ்வொரு தண்டணை நிறைவேற்றப்படும் போதும் பெரும் சம்மானமும் காளியப்பனுக்கு வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஆராச்சார்* - தூக்கு தண்டனை நிறைவேற்றும் தொழிலாளி.

(அப்போதைய கேரளத்திற்குட்பட்ட) நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ்க் குடும்பம் காளியப்பனுடையது. காளியப்பன் அதிக தேவி பக்தி உடையவராகவும், சாராயப் பிரியராகவும் இருந்தார். கள்ளுக்கடையிலே தான் எப்போதும் காணப்படுவார். அதைவிட்டால் வீட்டில் தேவி பூஜையில். எல்லாம் கடந்து அவரை ஒரு குற்றவுணர்ச்சி மெல்ல மெல்ல உருக்குலைத்துக் கொண்டே இருந்தது.

கள்ளுக்கடையில் அமர்ந்தவாரே...

"தூக்கில போடறக்கு முன்னாடி அவன் என்ன சொன்னாந் தெரியுமாடா "

"அதெல்லாம் இப்போ சொல்லி எந்தா காரியம் காளி ஏட்டா?" என்பான் பணியாள்

"நான் நிரபராதி...நான் இந்த தப்பு பன்னலைன்னு சொன்னான்..."

"குற்ற‌‌ம் செய்தவன் எப்போ ஒத்துண்டு இருந்திருக்கான் சொல்லுங்கோ..."

"அப்படியல்லடா...எனக்கு நல்லா தெரியும் அவன் நிரபராதி... அவன இதே கையால தான் கொன்னேன். அந்தப் பாவக்கரை என்ன விட்டு எங்கயும் போகாதடா..." என்று புலம்பியபடி தள்ளாடித் தள்ளாடி வீடு நோக்கி நடக்கத் துவங்குவார்.

&&&&&&

காளியப்பனின் வாழ்வியல் குறித்தும், இருப்பு குறித்தும் பல்வேறு வகையான பேச்சுக்கள் அக்கிராமத்தில் இருந்து வந்தது. காளியப்பனின் மூத்த மகன் முத்து. அவன் காந்தியின் இயக்கத்தில் இணைந்து ஊரூராக சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தான். முத்து கிராமத்துக்கு வருகையில் அவ்வழியில் வந்துகொண்டிருந்த கிராமத்துச் செல்வந்தரும் அவர் பணியாளும் அவனை நிறுத்தி காளியப்பனை நலம் விசாரித்தனர். "பின்னே... காந்தியும் நீயும் சேர்ந்துதான் எங்களை பிரிட்டிஷுடே கையிலிருந்து விடுவிக்கப் போறீங்க இல்லே?" என்று கிண்டலாக விசாரித்தனர். முத்து அவர்களுக்கு பதில் அளிக்காமல் நடந்து சென்றான்.

“பொன்னு தம்பிரானுடைய* காசுல வயிறு வள‌க்குறதால தான் இப்பிடி திரியுறானுக" என்றார் முதலாளி

"ஆனாலும் ஆராச்சாரு பாடு பரிதாபம் தான் பாருங்க...பாவம் மனுஷன் என்னவோ அவருக்கு கஷ்டம். போன தூக்குக்கு அப்புறமே ஆளு ரொம்பவும் துவண்டு போயிட்டாரு" என்றான் அந்த அடிமை.

"அயாளுக்கு ஒரு சங்கடம்...போன தடவை தூக்கிக் கொன்னவன் நிரபராதின்னு தெரியும்...ஆனா அதில் சங்கடப்பட‌ என்ன இருக்கு?...காசு கொடுக்குறாங்க… தூக்கில பொடவேண்டியது தான்...அயாளுக்கு இது தொழில் தானே?"

மிக‌ இர‌க‌சிய‌மான‌ குர‌லில் அவன் சொன்னான் "இருந்தாலும்...மொதலாளி... அப்படி சுலபமா சொல்லிட முடியாது. அவன் தூக்கிலிட்ட அடுத்த 15 நாள்ல கருத்தரிச்சு இருந்த அயாளோட மூத்த பெண் கர்பம் கலைஞ்சுட்டது. (பொன்னு தம்பிரான் - மரியாதைக்குரிய திருவாங்கூர் மகாராஜா)

நிரபராதிய கொன்ன பாவம் தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க...ஆராச்சர் சங்கடப் படுறதுலயும் ஆச்சர்யம் ஒன்னும் இல்லியே!"

"தூக்கிக் கொல்லும் பாவம் ஆராச்சருக்கு போவது எப்படி ஞாயம் ஆகும்...அவன் வேலைய தானே செய்றான்?"

"அப்படின்னா மொதலாளி யாருக்கு இந்த பாவம் எல்லாம் போய் சேருது?"

"கடைசியா யாரு தீர்மானம் எடுக்குறாங்களோ அவர்களுக்கு தான் போய் சேரும்...ஏன்னா அவங்க நினைச்சிருந்தா தண்டணைல இருந்து காப்பாற்றி இருக்கலாம் இல்லியா?"

“அய்யோ தெய்வ‌மே...அப்போ பொன்னு த‌ம்பிரானுக்கா இந்த பாவ‌ம் போய் சேரும் மொதலாளி?”

"அதுக்கெல்லாம் வ‌ழி செய்துட்டு உண்ட‌டா!. குற்ற‌வாளிய‌ தூக்கிலிட‌ற‌க்கு கொஞ்ச‌ம் முன்னாடியே பொன்னு த‌ம்பிரான் பிரப்பிக்கும் உத்தரவு ஒன்னு உண்டு: குற்ற‌ம் செய்த‌வ‌னை அவ‌ண்ட‌ எல்லா

பாவ‌த்திலிருந்தும் நீக்கி, ம‌ண்ணிச்சு விட்ட‌ர்ரேன்னு. அந்த‌ உத்த‌ர‌வை எடுத்துட்டு தூதுவன்‌ ஒருத்த‌ன் ஜெயிலை நோக்கி போவான்"

"பின்ன‌?"

"பின்ன‌...என்ன‌...? தூதுவ‌ன் ஜெயிலுக்கு போய் சேர்ர‌துக்குள்ள‌...குத்த‌வாளி க‌தைய‌ முடிச்சிருப்பாங்க‌! குத்த‌வாளியையும் கொன்னாச்சு...பொன்னு த‌ம்பிரான் பாவ‌த்திலிருந்தும் பிழ‌ச்சாச்சு!"

"இது ந‌ல்ல‌ க‌தையா இருக்கே!... அப்போ மொத‌லாளி, இந்த‌ பாவ‌ம் ச‌ரியா யாருக்கு தான் போய் சேரும்?" என்ற அந்த பாமரனின் கேள்விக்கு பதிலேதுமற்று மௌனமானார் முதலாளி.

மீண்டும் தொடர்ந்தவனாக “தூக்குல போட்றது இப்போவெல்லாம் வெகுவா கொறஞ்சிடுச்சு இல்ல மொதலாளி...ஊர்ல தப்பு கொறஞ்சிடுச்சா?”

"நீ எவண்டா இவன்...குத்தம் செஞ்சாலும் பைசா இருக்கிறவன், நல்ல வக்கீலு வச்சு வெளியே வந்துட்றான் இல்ல. வக்கீலுக்கும் சர்க்காருக்கும் பைசா அழுக வழியில்லாதவன் பாடு தான் தூக்கு மேடை வரைக்கும் வரும்"

“அப்படி சுலபமா சொல்லிட முடியாது அப்போ சட்டம் காசுக்காரனையும் மத்தவனையும் வேற வேற மாதிரி தான் பாக்குதா?”

“பின்ன...என்னாச்சு சின்ன அண்ணாச்சி வழக்குல...ஊருக்கே தெரிஞ்சும் கடைசியில கொலபாதகன் கோர்ட்டும் முடிஞ்சு கை வீசிட்டு இல்ல வெளிய வந்தான். தூக்குக் கயிறு விழுந்தது என்னவோ வேற கிறுக்குப்பய கழுத்துல !"

எதிரில் வ‌ரப்பில் ஒருத்தி கடந்து போக, மொத‌லாளி: "யாராண்டா இவ‌ளு...இது வ‌ரை இவ‌ள‌ பாத்த‌து இல்லையே...ம்ம்ம்?"

"ஏதாவ‌து புது ச‌ர‌க்கா இருக்கும்"

"ம்ம்ம்...எங்கிலும்...இதெல்லாம் இப்போ விசாரிச்சு காரிய‌ம் என்ன‌ இருக்கு"

"அப்ப‌டி....விட்டுற வ‌ய‌சாச்சா‌ என்ன‌ மொத‌லாளி...?"

"ஹி...ஹி... ஹி...சும்மா இரி டா... ம‌ண்டா!"

&&&&&&

மரணத்தின் நிழல் அதனை உண்டாக்கும் உபகரணங்களிலும் ஊர்ந்து வரக்க்குடியது. அதை உண்டாக்கிய ஒரு மனிதன் யாரோ முகமறியாத ஒருவனது மரணத்தையும் உண்டாக்குகிறான். அதை அவன் அறிந்திருக்காமலும் இருக்கலாம். ம‌த்திய‌ சிறைச்சாலையில் தூக்கிலிட‌க்கூடிய‌ தூக்குக்க‌யிறு அங்குள்ள‌ சிறைவாசிக‌ளாலே உருவாக்க‌ப் ப‌டுகிற‌து. அது ஏற்ப‌டுத்தும் அச்ச‌ம் குறித்தோ, இல்லை குற்ற‌வுண‌ர்வு குறித்தோ, ம‌ற்ற‌வ‌ன் ம‌ர‌ண‌த்தை சிருஷ்டிப்ப‌த‌ன் எதார்த்த‌ம் குறித்தோ, இல்லை வேறு ஏதேதோ புரித‌ல்க‌ள் குறித்தோ அப்ப‌டி செய்ய‌ப்ப‌டுகிற‌தா என்ப‌து தெரியாது. தூக்கிலிட்டு ம‌ர‌ ண‌‌ம் ச‌ம்ப‌வித்த‌ க‌யிற்றுக்கென்று பிர‌த்யேக‌ குண‌ங்க‌ள் உண்டு. தூக்கு முடிந்து அந்த‌ ம‌ர‌ண‌க்க‌றை ப‌டிந்த‌ க‌யிற்றை ஆராச்சாரே எடுத்துச்செல்ல‌ அனும‌திக்க்ப்ப‌ட்டார். வீட்டின் பூஜை ஸ்த‌ல‌த்தில் அது தொங்க‌விட‌ப்ப‌டும். உட‌ல் உபாதைக‌ள், ம‌ன‌ உபாதைக‌ள் யாருக்காவ‌து ஏற்ப‌டுகையில், அக்க‌ய்றின் சிறு துண்டை தீப‌மாக‌ இட்டு, ப‌ஸ்ம‌த்தை இட்டால் போதும், எல்லாப் பிணியும் நீங்கிவிடும். இதுவே ஊர்ம‌க்க‌ளும் ந‌ம்பி

வ‌ந்த‌ன‌ர். காளிய‌ப்ப‌னும் "இறைவ‌ன் ஒரு க‌யித்தை முடிக்கும்போது, இன்னொரு க‌யிறை தொட‌ங்க‌றான்" என்று சொல்லுவார்.

காளிய‌ப்ப‌னின் வீட்டில் ம‌க்க‌ள் வ‌ந்துகுவிந்த‌வ‌ண்ன‌ம் இருந்தார்க‌ள். பிணி குண‌மாகிச்செல்லும் சில‌ர், காணிக்கையாக‌ சில‌ ப‌ண‌த்தை அளிக்க‌வும் செய்தார்க‌ள். நாள‌டைவில் பெருங்கூட்ட‌ம் அருகாமை ஊர்க‌ளில் இருந்தும் வ‌ர‌ ஆர‌ம்பித்து. நாள் முழுதும் காளிய‌ப்ப‌ன் பூஜையில் அம‌ர்ந்திருந்தார். அப்போது-தான்-வ‌ய‌துக்கு-வ‌ந்திருந்த‌ இளைய‌ம‌க‌ள் ம‌ல்லிகா அப்பாவிற்காக‌ காடுக‌ளில் அலைந்து பூஜைக்கு பூக்க‌ள் ப‌றித்துச் செல்வாள். விரும்பியோ விரும்பாம‌லோ சிறிது செல்வ‌ம் காளிய‌ப்ப‌னின் வீட்டில் சேர‌

ஆர‌ம்பித்த‌து. தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ தூக்குக் க‌யிறும் அள‌வில் சிறிய‌தாக‌ குறைந்துகொண்டே வ‌ந்த‌து.

&&&&&&

சூரியன் மேலெழத் துவங்கியிருந்த ஒரு பகல்ப் பொழுதில் வந்திறங்கிய ஒரு வில்லுவண்டி அக்கிராமத்தின் அமைதியை சற்று கலைத்தது. துர்சொப்பணத்திலிருந்து எழுபவன் போல ஒரு அவசியமற்ற பதற்றம் நிலவியது. வந்திறங்கியது திருவாங்கூர் ராஜாவின் ஆஸ்த்தான நீதிமன்ற அதிகாரி. ஒடுங்கிக்கிடந்த தண்டூராக்காரன் தன் செண்டையை எடுத்துக்கொண்டு அதிகாரியை தொடர்ந்து சென்றான். மற்ற ஊர்மக்கள் அவனைத் தொடர்ந்தும்.

ஊர்வலம் காளியப்பனின் வீட்டின்முன் நின்றது. அதிகாரி "ஆராச்சார் எவிடே?" என்று குரல் எழுப்ப, ஆராச்சார் மனைவி ம‌ர‌க‌த‌ம் குழம்பை ருசிபார்த்தவாரே வெளிவந்தாள். அதிகாரி மீண்டும் "ஆராச்சார் இல்லே?" என்ற கேள்விக்கு பதிலேதுமின்றி தலைகுனிந்தாள். கூட்டத்திலிருந்த சிறுவன் "எனக்கு தெரியும்..எங்க இருபார்னு!" என்று நகைக்க ஊராரும் உடன் சேர்ந்து நகைத்தனர். அவமானத்தை காட்டிக்கொளாமல் ம‌ர‌க‌த‌ம் அப்படியே நின்றிருந்தாள். கள்ளுக்கடையிலிருந்து காளியப்பனை அழைத்துவர ஆள் அனுப்பப்பட்டது.

தண்டூரா முழங்க காளியப்பன் கைகட்டி தலைகவிழ்த்தி உத்தரவு கேட்கும் நேரம், முத்துவும் வந்து சேர்ந்திருந்தான். அதிகாரி வாசிக்கத் தொடங்கினார். "பொன்னு தம்பிரான் பேரில் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட கொலபாதகக் குற்றத்துக்காக குற்றவாளியை தூக்கிக்கொல்ல தீர்ப்பு சொல்லப்பட்டு இருப்பதால், சமஸ்த்தான ஆராச்சாரான காளியப்பன் வந்திருந்து, பொன்னு தம்பிரான்ட கட்டளையை நிறைவேற்ற கேட்டுக்கொள்ளப் படுது.

குற்றம் குறித்தும் குற்றவாளி குறித்தும் விபரங்கள் பத்தரத்தில இருக்கு. தூக்கு நிறைவேற்றும் வரை வெளியூர் எங்கையும் போகாமல் சுத்தபத்தமாக ஒரிக்கல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று நிறைவு செய்தார்.

"எந்தா ஆராச்சாரே... எல்லாம் கேட்டாச்சு இல்லியா??"

மௌனம் உடைத்து காளியப்பன் "ஐயா, வரவர ஒடம்புக்கு ரொம்ப முடியலிங்க...இனி எனக்கு இது ஒன்னும் ஆகாதுங்க.." என்று வார்தைகளை விழுங்கினார். ஊராரும் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரியும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.

"எந்தடோ...உனக்கும் உன் குடும்பத்துக்கும் சர்க்கார் கணக்கு பாக்காம வேணுங்கிறத கொடுக்கலையா...இருக்க வீடும், திண்ணவும், உடுக்கவும்...பின்ன வேற எந்தா வேண்டு..?. பொன்னு தம்பிராண்ட கட்டளையை மீற யாருக்கும் கழிவு இல்லைன்னு தெரியாதோ உனக்கு!! சும்மா கண்டதையும் நெனச்சுட்டு இருக்க வேண்டாம்" என்று கத்திவிட்டுச் சென்றார். மறுமொழியின்றி காளியப்பன் தலைகுனிந்தபடியே நின்றார். அதை எதிர்பார்த்த அதிகாரி...சமாதானத்துடன் ஊரை விலக்கி நடக்கத்துடங்கினார்.

&&&&&&

அதிகாரியின் வருகையைத் தொடர்ந்த நாட்கள் காளியப்பன் அதிக நேரம் பூஜையில் செலவிழிட்டும் வெளியே எங்கேயும் காணப்படாதவராகவும் இருந்தார். ஊரார் பல ரோகங்களுக்கும் நிவர்த்திகளுக்கும் வேண்டி வெளியூர்களில் இருந்தும் வரத்துடங்கினர். செய்தி அறிந்து அவரின் மூத்த மகளும் மருமகனும் ஒரு மதியப்பொழுதில் ஊரை நோக்கி வந்தனர். பூங்காவனத்தில் அப்பாவின் பூஜைக்கு மலர்கள் பறித்துக்கொண்டிருந்த மல்லிகா அக்கா வருவதை கண்டுகொள்கிறாள்.

"அக்கா...இந்த முறையாவது 2 நாள் இருப்பையாக்கா?"

"இல்லடி...விளக்கு வைக்கறக்குள்ள போகனும்"

"அக்காவுக்கு எப்பவும் அவசரம் தான்"

"நீயும் வாடி வீட்டுக்கு"

"அக்கா போய்க்கோ...நான் பின்ன வர்றேன். இன்னும் நிறையா பூ பறிக்கனும்"

"சரி...அப்போ நான் போறேன்" என்று சொல்லி நடக்கத்துடங்குகிறாள்.

அவளைத்தொடர்ந்தவாறே பின்சென்றான் கணவன், அப்போது தான் குமரியான அந்த பெண்ணை ஓரிருமுறை திரும்பி நோக்கியவாறே.

நேரம் கடந்தும், பொழுது இறங்கத்துவங்கிய போது கூட மக்கள் கூட்டம் வந்தவண்ணமே இருந்தது. காளியப்பன் மதிய உணவுகளைக்க்கூட விலக்கி பிராத்தனைகளில் ஈடுபட்டார். வருமானம் கிடைத்த போதும் வீட்டாருக்கும் இது சற்று தொந்திரவையே அளித்து வந்தது.

"இத்தனை நேரம் இருந்தும் அப்பாவை பாக்க முடியலையே அம்மா?"

"சத்த...இரு டீ...உனக்கு என்ன அவசரம். இருந்து தங்கீட்டு போலாம்"

"அதொன்னும் வேண்டாம் இப்போ. மாடும் கன்னும் யாரு பாத்துக்குவா...அப்பாகிட்ட பாத்து ஒரு காரியம் சொல்லிட்டு போலாம்னா, மனுஷனை கண்ணில் கூட பார்க்க முடியலையே. ஒரு துண்டு நில‌ம் வ‌ர‌ப்போடு சேர்ந்தாபோல‌...அச்சார‌ம் கொடுத்து வ‌ருஷ‌ம் மூனாகுது. அதொன்னு பார்த்து ஃபைச‌ல் ப‌ண்ண‌ ப‌ண‌ம் இல்ல‌. வேற‌ யார‌வ‌து அத‌ த‌ட்டிக்கொண்டு போனால், ந‌ம‌க்காக்கும் ரோத‌னை. அப்பாகிட்ட‌ சொல்லி கால‌ம் ஆச்சு"

"என்ன‌டி...உன‌க்கு தெரியாத‌தா...இப்போ தான் சின்ன‌வ‌ மூளைல‌ உக்காந்து இருக்கா. அவ‌ளுக்கும் காலாக‌ல‌த்துல‌ ஏதாவ‌து பாக்க‌னும் இல்லியா"

"அது தான் அப்பாவுக்கு நிறையா ப‌ண‌ம் வ‌ருதுன்னு கேக்கிறேனே...பிற‌வு.." என்பதற்குள் காளியப்பன் அனைத்தும் கேட்டவராக வெளியே வந்து

"அவளுக்கு என்ன வேணுமோ இருந்தா கொடுத்துவிடு" என்று சொல்லிச்சென்றார்

"இப்போ சந்தோஷமா உனக்கு?...இருந்து விடியும்போ போனா போதாதா?" என்று மரகதம் கேட்க..

"இல்ல அத்தை...மாடு கன்னு எல்லாம் பாக்கனும்" என்று முதல் முறையாக வாய் திறந்தான் மருமகன் வாசு.

"சரி அப்படின்னா...இவ இங்க இருக்கட்டும்"

"அய்யோ...அது சரிவராது அத்தை"

"ஓ...பெண்டாட்டிய பிரிஞ்சு ஒரு நாள் இருக்கமாட்டியோ வாசு" என்று மரகதம் சொல்லவும் வெட்கி சிரித்தனர் மகளும் மருமகனும். எதுவும் நடக்காததைப்போல தன்னுலகில் ஆடிவிளையாடியபடி மல்லிகா, ஆட்டை அவிழ்த்துக்கொண்டு மேய்க்கக் கூட்டிச்சென்றாள்.

&&&&&&

நாளாக நாளாக காளியப்பனின் உடல்நிலையும் சீர்குலைந்துகொண்டே வந்தது. அப்படிதான் அன்று வழக்கம் போல பூஜைக்கு முன் மரகதம் நீரை இறைத்து காளியப்பனின் மேல் ஊற்றிக்கொண்டிருந்தாள். பல குடம் தண்ணீர் ஊற்றியும் காளியப்பன் போதும் என்று சொல்லவே இல்லை "உடம்பு என்ன்வோ தெரியல...சுட்டுகிட்டு வருது...இன்னும் ஊத்து" என்றார். சிறிது நேரத்தில் ஜன்னி கண்டவர் போல உடல் முழுவதும் நடுங்கத் துடங்கியது. "உடம்புக்கு முடியலயா...போய் படுத்துக்க‌ங்கோ" என்று தலையை துவட்டிவிட்டு, ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதைப்போல கூட்டிச்சென்றாள் மரகதம்.

அடுத்த‌ தூக்குநாளும் நெருங்கிற்று. மாலை பொழுது விழுந்த‌வுட‌ன், ச‌ர்க்காரின் அதிகாரிக‌ள் வில்லுவ‌ண்டியுட‌ன் காளிய‌ப்ப‌ன் வீட்டு முன் கூடியிருந்த‌ன‌ர். ஊர்ம‌க்க‌ள் ஒரு ஊர்வ‌ல‌த்தை பார்வையிடுவ‌து போல‌ கையில் ப‌ந்த‌ங்களுட‌ன் நின்றிருந்த‌ன‌ர். முடியாத‌ நிலையிலும் காளிய‌ப்ப‌ன் அரைம‌ன‌சுட‌ன் புற‌ப்ப‌ட்டு காளியிட‌ம் உத்த‌ர‌வு வாங்கினார். "எங்கள் பாவங்களைத் தீர்க்கும் மாகாளி தாயே...மூர்க்கர் பிறப்பறுக்கும் தாயே அம்மா...நான் செய்வது எல்லாம் உனக்காக. செய்பவன் நான்...பெய்விப்பவள் நீ...காத்தருள்வாய் அம்மா..." என்று ம‌ன‌முருகி பிராத்தித்தார். காத்திருந்த‌ அதிகாரி பொறுமையிழ‌ந்த‌வ‌ராய் "சமையம் ஆகி ஆராச்சாரே.." என்று கத்தினார். வெளிவ‌ந்த‌ காளிய‌ப்ப‌ன் மீண்டும் ஒருமுறை "அய்யா...உடம்புக்கு சுத்தமா முடியலிங்க.." என்றார்.

"ஆ…இது நல்ல கதையா இருக்கு...இப்போ என்ன ஆராச்சாருக்கு உடம்பு சரியிலன்னு தூக்க தள்ளிவச்ச கதைய யாராவது கேடுட்டு உண்டா? இதோ இங்க பாரும் ஆராச்சாரே...உடம்பு சரியிலன்னா, பையனையும் வேணும்னா கூட கூப்பிட்டுக்கோ ஒத்தாசைக்கு...என்ன? அதுவல்லாது...சும்மா கொச்சுபிள்ளைகள் போல அடம்பிடிக்காதீர்என்று அறிவுறுத்தினார்.

பதிலேதும் பேசாமல் காளியப்பனும், அவரைத்தொடர்ந்து முத்துவும் கிளம்பி நடக்கத் துவங்கினர். மரகதம் போர்த்திக்கொள்ள ஒரு கம்பளியைக் கொடுத்து அனுப்பினாள். வண்டியின் அடியில் கட்டிய லாந்தர் விளைக்கின் வெளிச்சத்தில் அந்த வண்டி மெல்ல மெல்ல நகரத்துடங்கியது...மரண‌த்தின் வாதிலுகளை நோக்கி.

&&&&&&

இரவு நல்ல கடும் இருட்டைக் கடந்துகொண்டிருந்த நேரம் அனைவரும் ஜெயிலின் அறைந்த கதவுகளுக்குப் பின்னால் ஒடுங்கி இருந்தனர். கைதிகள் பலரும் தமது செல்களில் உறக்கமற்று படுத்திருக்கக்கூடும். நாளை தூக்கிலிடப்படுபவன் இன்றுதான் தான் கடைசியாக தூங்கும் நாள் என்பதை நினைவுபடுத்தியிருப்பானா?. அவனது கடைசி மணிநேரங்களின் மனவோட்டம் எதைக்குறித்ததாக இருக்கும்? என்ற எந்த கேள்விகளுக்கும் இடமில்லாமல் ஜெய்லரும், மற்றும் சில காவலாளிகளும், காளியப்பனும், பின் முத்துவும் ஒரு அறையில் வட்டமாக உட்கார்ந்து இருந்தனர். அன்றைய கூத்தின் பிராதானகர்த்தா தான் தான் என்று உணர்ந்திருந்த காளியப்பன், சற்று அதிகாரத்தோரனையுடனே காட்சிதந்தார். சர்க்காரின் அதிகாரமும், அடக்குமுறையும் அவரிடம் சேவகம் செய்து நிற்பதைப் போல ஒரு தோற்றம் அவருக்கு உருவாகியிருக்கக்கூடும்.

எப்போழுதும் காணப்பட்ட தோற்றத்திலிருந்து காளியப்பன் வேறுபட்டு காணப்பட்டார். ஜெயிலின் வேளையாளை அழைத்தார் "சனாதனம்பிள்ளை..! சாராயம்?" என்பதற்குள் "அப்படியே கடிக்கவும் ஏதாவது கொண்டுவா" என்றார் ஜெயிலர். ஓரு பாட்டில் சாராயத்துடன் ஒரு கண்ணாடி டம்ளரையும், சிறிது மாங்காய் உப்பும் எடுத்துவந்தான் வேலையாள். "இன்னொரு டம்ளரும் கொண்டுவா" என்றார் காளியப்பன். ஜெயிலர் "அ..அய்யோ...ஆராச்சாரே...எந்தாயாலும் டூட்டியாகிப்போச்சு, இல்லாட்டி ஒன்னு கூட்டு போட்டிருக்கலாம்" என்றார்.

மற்றுமொரு டம்ளரில் சாராயத்தை ஊத்தி மகன் முத்துவிடம் தந்தார் காளியப்பன். அதிர்ச்சியடைந்த முத்து "அப்பா...இது என்ன பிடிவாதம்" என்றான்.

நான் இது வரை உன்னை சாரயம் குடிக்கச்சொல்லி சொல்லியிருக்கனா?... நீ மொதல்ல குடிக்கிற சாராயம் நான் கொடுத்ததா தான் இருக்கனும்...இந்தா குடி!" என்று வற்புறுத்தவே, முத்து அந்த சாராயத்தை மறுபேச்சின்றி குடிக்க முயற்சி செய்து திமிறினான். மற்றவர்கள் "ம்ம்...முதல் முறை அப்படி தான் இருக்கும்...போகப் போக சரியாயிடும்" என்றனர்.

ஜெயிலர் "சரி எந்தாயாலும் இனி உறங்கீட்டு காரியம் இல்லை...ஏதாவது கதை பேசலாமே?"

மற்றவர்கள் "என்ன கதை சொல்லலாம்...ராஜ்ஜியமும் கெட்டியவளும் புத்திரனும் எல்லாம் போன போதும் உண்மையை மட்டும் தான் பேசுவேன்னு நின்ற அரிச்சந்திர ராஜாவைப்பற்றி பேசுனாலோ?"

"அது யாருக்கு வேணும்? எதார்தம் சொன்னா, பொய் சொல்லாம இந்த பூமியில நடக்குற ஏதாவது உண்டா சொல்லு..."

"சூதின் கையில அகப்பட்டு தேசத்தையும், சொத்துக்களும் பின்ன சொந்த கெட்டியவளையும் இழந்து, மீண்டும் ராஜ்ஜியத்தை கைப்பற்றின பாண்டவர்கள் கதையோ?" என்றார் இன்னுமொரு காவலாளி.

ஜெயிலர் இடைமறித்து "இது எல்லாம் கேட்டு புளித்துபோன கதையில்லியோ? வேணும்னா ஒன்னு செய்யலாம். ஒரு வித்தியாசதுக்கு நான் ஒரு கதை சொல்றேன்" என்றார்.

அதற்குள் ஒரு பாட்டில் சாராயத்தை முடித்துவிட்டு, அடுத்த பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு, கதை கேட்க ஆயத்தமானார் காளியப்பன்.."ம்ம்ம்...கதை சொல்லுங்கோ..!" என்று விளித்தார்.

"இது புராணக்கதையோ இல்ல ஒழுக்கசீலன்மாருடைய கதையோ இல்லை. நாம் தினமும் பார்க்கிற எதார்த்த மனுஷ ஜீவிததுடைய கதையாக்கும்...என்று சொல்லத்துடங்கினார்..."

ஒரு அழகான கிராமம், நம்ம நாகர்கோவில் பக்கம் போல. பச்ச மரங்களும், பூக்களும், பூம்பாச்சைகளும், குளமும், கோவிலும் எல்லாங்கூடிய ஒரு அமைதியான கிராமம். யாரும் யாருக்கும் தொந்திரவு நினைக்காமல், எல்லாம் அவரவர் வேலையுண்டுன்னு இருந்து வரக்கூடிய, நாம சின்னப் பிள்ளைல கண்ட போல ஒரு சினேகமுள்ள மக்கள். அந்த‌ சின்ன‌ ஊர்ல‌ ஒரு 18 வயது இருக்கக்கூடிய ஒரு ஆடு மேய்க்கும் பையன் இருந்து வந்தான், அவ‌ன்தான் நம்ம கதாபுருஷ‌ன். அதே கிராமத்தில் ஒரு ஏழை விவசாயுடைய பொண்ணு, நம்மட நாயகி. வயசு ஒரு 13 இருக்கும். சின்ன குழந்தை போல குதுச்சும் குதூகலிச்சும் யாராலும் கட்டிப்போடாத காத்து போல

விளை யாடிட்டு இருந்த அந்த பொண்ணு அப்போ தான் பெரிய மனுஷியாகி மூளைல உட்கார்ந்திருந்தா. அவளுடைய அப்பன், இதுக்கு மேல பிள்ளைக்கு படிப்பு வேணாம்னு வீட்டிலேயே உட்காரவைச்சுட்டார் என்று கதை நீள... போதையில் வீங்கிய காளியப்பனின் கண்கள் தன்னிச்சையாக தன் சொந்த மகளையே அந்த 13 வயது கதாநாயகியாக பார்க்கத் துவ‌ங்கிய‌து. கதை அவர் கண்முன்னே தன் சொந்த வண்னங்களுடன் விரியத்துடங்கியது. (அதனால் அந்த பெண்ணை இனி மல்லிகா என்றே அழைப்போம்).

தன் உடல் மாற்றத்தின் கூறுகளையே புரிந்துகொள்ளக் கூடிய‌ பக்குவம் கூட‌ இல்லாத மல்லிகா, தன் பள்ளித்துணைகளையும் இழந்து தனிமையில் காலம் கழிக்கிறாள். பொழுது போகாவிட்டால் ஆட்டை அவிழ்துக்கொண்டு போய் காடுகளிலோ, மலைகளிலோ மேய்க்க விடுவாள். ஊர் பையன்கள் அவளை இப்போதெல்லாம் வித்தியாசமாக பார்ப்பதை அறிந்து வைத்திருந்தாள். அது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. மத்தபடி அந்த ஆடு மேய்க்கிற பையன்னு சொன்னா...அவனுக்கு அப்பா அம்மா ன்னு யாருமிலாத ஒரு அநாதன். யாராவதுடைய ஆட்டுக்குட்டிகளை மேச்சுட்டு வருவான். ஊர் கூடுகிற இடத்தில் நின்னு புல்லாங்குழல் வாசிப்பான். அவனா எதுவும் கேட்க்கமாட்டான். யாரவது எதாவது கொடுத்தா வாங்கிக்குவான். யாருக்கும் பாவம் நினைக்காத ஒரு வஸ்த்து.

தினம் தினம் இருவரும் பார்த்து வரும் போது இரண்டு பேருக்கும் ப்ழக்கம் உண்டானது. எந்த புதிய விஷயுமும் பரவசமும் சந்தொஷமும் தரக்கூடிய ப்ராயம் மல்லிகாவுக்கு. யாருக்கும் உடனே பிடித்துவிடும்படியான குழந்தைப் பேச்சும், புன்னகையும் அவளுக்கு. அந்த ஆடுமேய்க்கும் பையனுக்கும் அவளைப் பிடிச்சுப் போனதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்ல. அவனது புல்லாங்குழல் இசை அவளுக்குள் ஏதேதோ செய்துகொண்டிருந்தது. நள்ளிரவில் கூட அவனது குழலிசை அவளைத்தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது உண்மை தான். வானம் வெளுக்கும் வரைக் காத்திருப்பாள். பின் அவசர அவசரமாக ஆட்டை அவிழ்த்துக்கொண்டு மலைஉச்சிப்பக்கம் சென்று விடுவாள். அவளுக்காகவே காத்திருப்பதைப்போல அவனது புல்லாங்குழல் சோக ராகத்தில் இசைக்கத் துடங்கி இருக்கும். சுருங்கச்சொன்னால் அவர்கள் இருவரும் காதலிக்கத் துடங்கி இருந்தனர், அவர்களுக்குத் தெரியாமலே...

அவன் சந்தையில் அவனுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில் அவளுக்கு பரிசுகள் வாங்கி வருவதும், அவனில்லாத பொழுதுகளில் அவள் அவன் நினைப்பில் வாடி இருப்பதுவும் அடிக்கடி நடந்துவந்தது.

அப்படி ஒரு முறை அவனொரு ஜொலிக்கும் மணி ஒன்றை வாங்கி வந்து தந்தான். "நல்லா சூரியனுக்கு நேரா பிடிச்சு பாரு...பாக்க அலாதியா இருக்கும்..."

அவள் உயர்த்திப்பார்த்து கண் இருட்டிப் போய் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள். அவன் சற்றே சமாதானம் செய்ய "கண்னை இறுக்கப் பொத்திக்கோ...சரியாகிடும்" என்றான்.

"கண் அடைக்கவே முடியல..திறந்து திறந்து வருது" என்றாள்.

"நான் வேணா பொத்தித் தரவா?" என்று அவள் கன்னங்களைச் சேர்த்து அவள் கண்ணைப் பொத்தினான்.

அவள் உடல் முழுதும் மயிர்க்கூச்செறிந்து, முகமெல்லாம் சிவந்தவளாய் "என்னவோ போல இருக்கு..." என்று சிரித்து கைகளில் முகம் பொதித்தாள்.

அந்நேரம் யாரோ மறைந்திருந்து அவர்களை கவனிப்பதாக தோன்றிய அவள், சந்தேகப்பட்டது போலவே இரண்டு கண்களை மட்டும் கண்டாள். அந்தக் கண்கள் அவளுக்கு மிகவும் பரிட்சையப்பட்ட கண்களாக இருந்தது. அது அவளை மிகவும் பீதியடைவும் செய்தது!!"

என்று கதையை அங்கு நிறுத்தினார் ஜெயிலர்.

அந்த கண்கள் யாருடையாதா இருக்கும்னு நினைக்கறீங்க?” என்று கேள்வியை அனைவரது பக்கமும் திருப்பினார்.

"யாரா இருக்கும்...யாராவது குடிகாரனோ, இல்ல ஸ்த்ரீலோலனாகவோ, வேலை இல்லாத எவனாவதா இருக்கும்" என்றார் ஒரு கான்ஸ்டபிள்.

ஜெயிலர் "இல்லை...அவன் ஸ்த்ரீலோலனெல்லாம் இல்லை. தன் பொண்டாட்டி தவிர வேறு எந்த பொண்ணையும் நேரிட்டு கூட பாத்தவன் இல்லை அவன்; கள்ளைக் கையால் கூட தொட்டதில்லை; தானுண்டு, தன் வேலையுண்டுன்னு தன் விவசாய வேலை மட்டும் பார்துட்டு இருந்த அந்த மனுஷன் வேற யாருமில்ல... அந்தப்பெண்ணோட மூத்தவளுடைய புருஷன் தான்" என்றார்.

இதைக்கேட்டு சற்றே பதட்டம் அடைந்த காளியப்பன், இன்னுமொரு சாரயத்திற்கு சொல்லி அனுப்பினார். முத்து "ஏற்கனவே அதிகமா குடிச்சுட்டீங்க" என்று சொல்லியதை காதில் கூட வாங்காமல் காளியப்பன் வருத்தமளிக்கும் கண்களுடன் "மேலே சொல்லுங்கோ!" என்றார்.

ஜெயிலர் தொடர்ந்தார்...

"அதுவரை சரியா கூட பார்த்திராத மச்சினச்சியை...அன்று அந்த கோலத்தில் பார்த்ததிலிருந்து அவனது மனசு அவன் சொல்படி கேட்க மறுத்தது. அதுவரை ஒரு குழந்தைபோல தெரிந்த அந்த இளம்பிராய பெண், அவனுக்கு ஒரு கொழுத்து மொழுத்த முழு மோகினியாக காட்சிதர ஆரம்பித்தாள். அவளது பிம்பம்

அவனை முழுவதுமாக ஆட்கொள்ள ஆரம்பித்தது. வேலையிலும், மனைவியிடமும் மனம் ஈடுபடவில்லை. ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியும் அவனை ஆட்கொண்டு அலைக்கழித்தது. அவன் காமம் பீடித்தவனாக ஒரு அசைவற்ற பிணம் போலவே நடமாடத் துவங்கியிருந்தான். சில சமயம் அவளுக்குத் தெரியாமலே அவளைப் பின் தொடர்ந்து தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அவள் வீட்டின் முன்பாக மறைவாக நின்று அவளது நடவடிக்கைகளை கவனித்து வந்தான். மாமியாருக்கும், மாமனாரும் இதை எதையும் அறிந்தவர்கள் இல்லை. அக்காள் புருஷன் பின் தொடர்வதைத் தெரிந்தும் வீட்டில் சொல்ல முடியாத நிலையில் வாயடைத்து பயந்து திரிந்தாள் மல்லிகா. ஆனால் இது எதுவும் அவளுக்கு அந்த ஆடு மேய்ப்பனுடனான காதலைக் குறைக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல குற்றமற்ற காதலில் ஒருவரை ஒருவர் தொலைத்தவண்ணம் இருந்தனர். "

அந்த ஒரு மதியப்பொழுதில் அப்படித்தான் அவ்விருவரும் வரவிருக்கும் ஆபத்து தெரியாமல், புல்வெளியில் கிடந்து பேசிக்கொண்டிருந்தனர். மல்லிகா மிகவும் வருத்தமுடையவளாக‌க காணப்ப‌ட்டாள். அவன் தன் புல்லாங்குழலில் அவளுக்குப் பிடித்த ராகத்தில் வாசித்துக்கொண்டிருந்தான். எல்லா கலவரங்களும் கடந்து அவளுக்கு அது மட்டுமே சந்தோஷத்தை தந்தது. அவன் அவளுக்கும் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுத்தருவதாக சொன்னான். அவள் முயன்று முயன்று பார்த்து, செல்லமாக கோவித்துக்கொண்டாள். "இந்த பாழாப்போன குழல் நீ வாசிச்சா மட்டும் தான் வாசிக்குமா?" என்றாள்

"மல்லிகா...இங்கே பாரு...இது வெறும் ஒரு மூங்கிலாக்கும். இதுல காய்ச்சிய துளைகள் போட்டு...அதுல மூச்சுக்காத்தை விடனும்"

அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி "ம்ம்..." கொட்டினாள்.

"அப்படி ஊதும் போது என்ன பிறக்கும் தெரியுமா?"

"என்ன.."

"இசை...சங்கீதம்..." என்றான்.

அவள் சற்றே தயக்கத்துடன்... "ம்ம்ம்.. ஹூம்.. இல்லை...பிறப்பது...ஸ்நேகம்...அன்பு..!" என்று வெட்கப்பட்டு தலை குனிந்தாள். அவள் கண்கள் சிவந்து போயிருந்தன.

அவன் சற்றே சங்கோஜமானவனைப்போல "நீ இந்த குழலை வச்சு வாசிச்சுட்டு இரு...நான் இதோ வந்திடறேன்" புறப்பட்டான். "எங்கையும் போகாதே...இங்கேயே இருக்கனும்...நான் வந்துடறேன்" என்று சொல்லிச்சென்றான். அவன் மெல்ல புல்வெளிகளில் நடந்து மறைந்து சென்றான். அவள் அவன் போன வழிநெடுகவே பார்த்துக்கொண்டிரிந்தாள்.

அவன் மறைந்து சில நேரங்கள் கூட இருக்காது...சற்றும் எதிர்பாராவிதமாக இரண்டு முரட்டுத்தனமான கைகள் அவளை இறுக வந்து பற்றின. அந்தக் கைகளில் திண்ணமான ஒரு வேட்கையும், வெறியும் அடங்கியிருந்தது. அந்த அசுர பலத்திற்கு முன் அவள் நிராதரவாக, உதவியற்று கத்திய ஓலக்குரல் மட்டும் தான் சில முறை கேட்டது "அத்தான்...விடுங்க அத்தான்...விடுங்க அத்தான்" என்று அலறிய அந்த குரல், மீண்டும் அந்த வன்மம் மிக்க கரத்தில் பொதிந்ததுஅதற்குப் பிறகு…” .

போதும் நிறுத்து... என்று அலறினார் காளியப்பன். அவர் முகமெல்லாம் வியர்த்து மூச்சிறைத்து மீண்டும் சொன்னார் "போதும் நிறுத்துங்கோ..!".

அந்த அறை முழுக்க அப்படியே ஸ்தம்பித்து போனது. ஜெயிலர் சற்றே குற்றவுணர்ச்சியோடு "சரி...அப்படின்னா வேண்டாம்...இதோட நிப்பாடிக்கலாம்" என்றார்.

மற்றுமொரு கான்ஸ்டபிள் "அடடா...வல்லாத்த இடத்தில் இல்ல கொண்டு நிறுத்தி இருக்கீறு.." என்றார்.

அதற்குள் ஒருவர் ஆர்வத்தில் "அதற்கு அப்புறம் என்ன ஆச்சு...ஏதாவது அபகேடு ஆயிடிச்சோ?" என்று முந்திரிக்கொட்டைத் தனமாக கேட்க...கோபமடைந்தார் ஜெயிலர்.

மற்றுமொருவர் "என்ன சொல்லு...இந்த ஆளு கதை சொல்றதுல கில்லாடியாக்கும். ஆயாளுட விவகர்ணையும்...கோப்பும்... யாருக்கு தான் மீதி கதையை கேக்கனும்னு தோனாது சொல்லு" என்றார்.

"எல்லாம் ஒரு மாதிரி சொல்லி வரும்போது தான்...இந்த ஆளு...சிறுபிள்ளத்தனமா ஒரு கேள்வி" என்று சினுங்கினார் ஜெயிலர்.

அதற்குள் காளியப்பன் ஒருவாறு சமாளித்துக்கொண்டு "அப்புறம் என்ன ஆச்சு.. சொல்லுங்கோ." என்று வினவினார்.

ஜெயிலர் மீண்டும் தொடர்ந்தார்…

அதுக்குப் பிறகு அந்த ஊர்மக்கள் பார்த்தது...அந்த இடத்தில் உடைஞ்ச புல்லாங்குழலும்...மேயலுக்கு இருந்த ஆட்டுக்குட்டியும்...பின்ன இறந்து கிடந்த அந்த சின்னப் பிள்ளையும் தான். அடைளாளம் தெரியாத படிக்கு தலைமேல கல்லைப்போட்டு சதைச்சு வச்சிருந்தான். அங்கிருந்த ஆட்டுகள், புல்லாங்குழல், அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்த ஊர்மக்கள் சாட்சி என்று எல்லாம் சேர்ந்து ஆடு மேய்கிறவன் தான் கொலைபாதகன்னு முடிவு செஞ்சுட்டாங்க. அவனுக்குன்னே யாரும் இல்லாத அந்த அநாதைக்கு வாதாட யாரு கிடைப்பா சொல்லுங்க? எல்லா உண்மையும் தெரிஞ்சு இருந்தும் அந்த பிள்ளையோட அப்பா, ஒன்னும் வாயைத் திறக்கவே இல்ல..." என்று நிறுத்திக்கொண்டார்.

"அவரு செஞ்சதும் சரி தானே... என்ன ஆனாலும் ஒரு பொண்ணு செத்துப்போச்சு. இன்னொரு பொண்ணும் விதவை ஆகணுமானு யோசிச்சு இருப்பார்" என்று ஞாயப்படுத்தினார் ஒரு கான்ஸ்டபிள்.

மிகவும் மனநலம் குலைந்த நிலையில் இருந்த காளியப்பன் "அப்புறம் என்ன ஆச்சு??" என்று வேத‌னையாக‌ கேட்டார்.

ஜெயில‌ர்..."அது ச‌ரியாப் போச்சு...என்ன‌ ஆச்சுன்னு கேக்க‌றீங்க‌ளா? அந்த‌ப் பைய‌னைத் தான் இன்னும் சில‌ ம‌ணிநேர‌த்துல‌ நீங்க‌ தூக்கிக் கொல்ல‌ப் போறீங்க‌...கைதியோட‌ வ‌ழ‌க்கு ப‌த்திர‌ம் எல்லாம் ஒன்னும் வாசிக்கிலையோ?"

"அது சரி...தூக்கிக்கொல்லப்போறவனை பற்றி படிச்சு என்ன காரியம்னு விட்டிருபார்ர்ர்ர்..." என்று யாரோ சொல்லி முடிப்பதற்குள்...

"இல்லை...இல்லை...நான் இதைச் செய்ய மாட்டேன்...நான் செய்ய மாட்டேன்...” என்று சிறுபிள்ளை போல உடைந்து அழத்துடங்கிய காளியப்பன், அப்படியே தரையில் மயங்கி விழுந்தார்.

தூக்குக்கைதியை பரிசோதிக்கும் சிறைமருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் ஏது பேசாமல் ஜெயிலரிடம் வந்து விஷையத்தைச் சொன்னார். இது ரொம்ப பிரச்சனையான விஷயம் ஆச்சே. இப்போ சரியான நேரத்துக்கு தூக்கு நடக்குலன்னா...பொன்னு தம்பிரான் பிரப்பிகுற மன்னிபுக்கடுதாசி வந்து சேந்துடும். அப்புறம் கொலையாளியை விடிவிக்க வேண்டிவரும். என்று எச்சரித்தார். இப்போ அதுக்குள்ள வேற ஆராச்சாருக்கு எங்க போறது?...ஒன்னு செய்யலாம் ஆராச்சார் கூட யாராவது உதவியாள் வந்திருந்தா அவங்கள வைச்சு முடிச்சர்லாம் என்று யோசனை கூறினர் சிலர்.

&&&&&&

ஒரு விடியலில்

தூக்கு நேரம் நெருங்குகையில் தூக்குக்கயிற்றை ஏந்தி தூக்கு மேடை நோக்கி தன் தகப்பனது ஸ்தானத்திலிருந்து ஆராச்சாரின் கடைமைகளை நிறைவேற்றினான் காந்தியவாதியான முத்து.

ஆராச்சார் பாத்து வைத்த கயிற்றில் ஒன்னும் சரிபார்ப்பதற்கில்லை. பாபஜீவி கொண்டுவரப்பட்டான். நெய்யும் வாழைப்பழங்களும் தடவிய மரணக்கயிறு மிகவும் முறுக்குற்றதாக இருந்தது. மேடையின் மேல் நிற்கவைக்கப்பட்டான். எப்போது வேண்டுமானாலும் விட்டுப்பிரிந்து வாய் பிளக்கக்கூடிய மரவாதில்கள் அவனது கால்களின் குளிர்ச்சியை உணர்ந்திருக்கும். அங்கியொன்று அவன் முகத்தில் அணிவிக்கப்பட்டது. ஜெயிலர் கடிகாரத்தை சரிபார்த்து, அவரது கண்ணசைவில் தொழிலாளி லிவரை விலக்க, கயிற்றின் முடிச்சு விரைந்து பயணித்து கழுத்தெலும்பை முறித்தது. அவன் முழு உடம்பும் குழிக்குள் சென்றது. வெளியே உடலை எடுத்துச்செல்ல யாருமற்றவராக அவன் மறித்துப்போனான்.

திட்டமிட்டபடி சரியான நேரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வழக்கம் போலவே பொன்னு தம்பிரான் பிரப்பித்த மன்னிப்புக் கடிதம், தாமதமாகவே வந்து சேர்ந்தது!.

&&&&&&

நிழல்குத்து:

மரணத்தைக் கையால் தொட்டுப்பார்த்திருக்கிறீர்களா? அது மிகவும் பிசுபிசுப்பானது. கண்மை போல ஒட்டிக்கொண்டு நீங்க மறுத்தவண்ணமே இருக்கக்கூடியது. சற்றுமுன் கடந்து போன சாலைமனிதன் அடுத்த நிறுத்தத்தில் அடிபட்டு இறந்துபோனால் கூட அதன் நினைவு அன்று முழுக்க நிலைத்து நின்று விசனம் தரும். மிக நெருங்கியவர்களின் மரணம் சில சம‌யம் நம் வாழ்கையின் சில பகுதிகளையும் அவர்களுடனே எடுத்து சென்றுவிடுகிறது. யாருக்கும் அகப்படாமலும், கட்டுப்படாமலும், புரிதல்களுக்கு அப்பாற்பட்டும் இருப்பதாலோ என்னவோதான் மரணத்தின் மீது மிகுந்த மரியாதையும் அச்சமும் கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு படி சென்று மரணத்தைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் கூட செய்கிறார்கள். மரணம் ஒரு சம்பவம் என்பதைக் கடந்து அது ஒரு தத்துவம் என்ற நிலையைக் கொள்கிறது. மரணம் பற்றிய பயமும், புரிதலின் முயற்சியுமே ஆன்மிகத் தேடலின் ஆரம்பப்புள்ளி.

நவீன‌மும் அதிகாரமும் கட்டமைத்த சட்டதிட்டங்களின் பேரில் ஒரு மனிதனே மற்றுமொரு மனினுக்கு மரணத்தை நிறைவேற்றுவது நாம் பிரபஞ்ச செயல்பாட்டின் மேல் கொண்டிருக்கும் அதீத தலையீட்டையும், மனித இனத்தின் பாகுபாட்டில் கொண்டிருக்கும் பற்றுதலையும், சகமனித இனத்தின் மேல் கொண்டுள்ள வன்மத்தையுமே காட்டுகிறது. அதுவும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு மனிதன், அவன் மரணத்தை மணந்தவனாகவே இருக்கிறான். பாவத்தை சுமப்பதின் குற்றவுணர்வும், அலைக்கழிப்பும் அவர்களை எப்போதும் ஆட்கொண்டே உள்ளது. பாரதப்போரில் சரதல்ப்பத்தில் சயனித்துக் கிடக்கும் கங்காபுத்திரர் பீஷ்மரைப் போலவே இவர்கள் வாழ்நாள் முழுக்க முள்ளேறிய முதுகுடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மனஉணர்வுகளை ஒரு தூக்கிலிடுபவன் பார்வையில் துல்லியமாக பதிவு செய்கிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் 'நிழல்குத்து'.

2002ம் ஆண்டு வெளிவந்து பல விருதுகளை வென்று சென்றது இந்தத் திரைப்படம். இன்றளவும் பல சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஃப்ரான்ஸில் ‘Le Serviteur de Kali’ என்றும் ஆங்கிலத்தில் ‘Shadow Kill’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. முத்து வாக நடிகர் நரேனும், மல்லிகா வாக ஆட்டோகிராஃப் மல்லிகாவும் அறிமுக நடிகர்களாக இடம்பெற்றனர். காளியப்பனாக ஒடுவில் உன்னிகிருஷ்ணன் வாழ்ந்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக அவ்வருடம் கேரளா மாநில விருது பெற்றார். இவ்வளவு நுணுக்கமான சினிமாவுக்கு இசைமட்டும் சாதாரணமாக அமைந்துவிடுமா என்ன? இளையராஜா வின் பின்னணி இசையில் அலங்கரிக்கப் பட்டிருந்தது 'நிழல்குத்து'. பல்வேறு உலக சினிமாக்கள் நமக்கு விதவிதமான முத்துக்களாக பரிட்சையப்பட்டும் பரிமாறப்பட்டும் வந்த போதிலும், இது போன்ற நம் கால்களுக்கு அடியில் கிடக்கக்கூடிய கிளிஞ்சல்களையும் ஆதரிப்பதும், பார்வைக்கு உட்படுத்துவதும் ஆரோக்கியமானதாகும். நம்புங்கள் கிளிஞ்சல்களில் கடல் ஒளிந்திருக்கிறது!.

&&&&&&

15 கருத்துகள்:

  1. எனது நீண்ட நாள் காத்திருப்பு வீண் போகவில்லை...எவளவு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் டா இருக்கு பிரவீன்.... எடுத்துக்கொண்ட களம்!!!!
    வலையுலகின் பாலா (இயக்குனர்) நீங்கள்.

    வழக்கத்துக்கு மாறாக ஒரு சினிமா விமர்சனம் போலலாமல் கதையின் பாங்கில் சொல்லி இருப்பது வெகு சிறப்பு.

    // உலக சினிமாக்கள் நமக்கு விதவிதமான முத்துக்களாக பரிட்சையப்பட்டும் பரிமாறப்பட்டும் வந்த போதிலும், இது போன்ற நம் கால்களுக்கு அடியில் கிடக்கக்கூடிய கிளிஞ்சல்களையும் ஆதரிப்பதும், பார்வைக்கு உட்படுத்துவதும் ஆரோக்கியமானதாகும்//
    சவுக்கடி!

    படைப்பு அருமை..நல்ல இருக்கு, சிறப்பு, வாழ்த்துக்கள் அப்படின்னு சொல்லி எனக்கு போர் அடிசிரிச்சு பிரவீன்....
    கால காலத்துல ஒரு புக்க வெளியிடற வழிய பாருங்க....

    பதிலளிநீக்கு
  2. என்னமோ கதை வித்யாசமா நல்லா இருக்கேன்னு படிக்க ஆரம்பிச்சேன். கடைசிலதான் விமர்சனம்னு புரிஞ்சுகிட்டேன். அருமையிலும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி மணி...

    ****

    பாலாவின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அழகான விமர்சனம் பிரவீன்...நிழல்குத்து இன்னும் பார்க்கவில்லை...அவசியம் பார்த்தே தீர வேண்டும் இப்படத்தை...

    http://roudran4.blogspot.com/2009/07/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  5. பிரவீன்
    அருமையான் பதிவு.. இதை படித்த உடனே எப்படியாவது நிழல் குத்து படத்தை பார்த்தே தீர வேண்டுமென முடிவு செய்துவிட்டேன். நேர்த்தியான விமர்சனம் .

    பல வரிகள் ஆழமானவை
    \\பிரபஞ்ச செயல்பாட்டின் மேல் கொண்டிருக்கும் அதீத தலையீட்டையும்,\\
    \\பாவத்தை சுமப்பதின் குற்றவுணர்வும், அலைக்கழிப்பும் அவர்களை எப்போதும் ஆட்கொண்டே உள்ளது\\
    இன்னும் பல..

    \\இது போன்ற நம் கால்களுக்கு அடியில் கிடக்கக்கூடிய கிளிஞ்சல்களையும் ஆதரிப்பதும், பார்வைக்கு உட்படுத்துவதும் ஆரோக்கியமானதாகும்.\\
    சத்தியமான உண்மை.
    \\நம்புங்கள் கிளிஞ்சல்களில் கடல் ஒளிந்திருக்கிற\\
    என்னை மிகக் கவர்ந்த வரி.

    இங்கிலாந்து நாட்டின் இணையற்ற இணைய முத்து
    இப்ஸ்விச் மாநகரின் தன்னிகரற்ற தமிழ் ஒளி
    பாலா சொன்னது போல,

    நீ வலையுலகின் இன்னொரு பாலா(இயக்குனர் அல்ல ;)

    மற்றுமொரு நல்ல பதிவு..

    நட்புடன்,
    கெளதம்.

    பதிலளிநீக்கு
  6. சக எழுத்தாளர் கௌதமிற்கு நன்றி....

    நீ(ங்கள்) இப்படி வரிகளை அடிக்கோடிட்டு நன்றாக உள்ளது என்று சொல்லுவது சற்றே என்னை வருத்தமளிக்கச் செய்கிறது. இருப்பினும் நீ வலையுலக சுனாமி பாலாவுடன் என்னை ஒப்பிட்டு கூறியதே எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கிறது...

    பதிலளிநீக்கு
  7. ஏம்பா நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு அடங்கவே மாட்டிங்களா?? நானே சிவனேன்னு இருக்கேன்...அம்பிய எதுக்குப்பா அடிக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல அருமையான விமர்சனம் தல
    ஆராச்சர் போன்ற நிலையிருப்பவங்கள பத்தி நமக்கு தெரியவர்வதில்லை.
    இது போன்ற படங்களின் மூலமாத்தான் மக்கள் தெரிஞ்சுக்க முடியுது.
    அடூராரின் பணி மகத்தானது.

    // இளையராஜா வின் பின்னணி இசையில் அலங்கரிக்கப் பட்டிருந்தது 'நிழல்குத்து'. //

    இதுக்காகவும் இந்த படத்த பாக்கனும் :-))

    பதிலளிநீக்கு
  9. படம் பாத்துட்டேன் ப்ரவீண்.நீங்க எழுத எவ்வளவு சிரமம் எடுத்துக்கறீங்கன்னு புரியுது.நல்லாயிருக்குன்னு ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போற பாராட்டுக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது.படத்தை முற்றிலும் உள்வாங்கவே இவ்வளவு சிரமம் தேவைப்படும் பொழுது.அதை அமர்ந்து எழுதவெல்லாம்.என்ன சொல்வது...great

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி ராஜேஷ் ரௌத்திரன். இந்த கட்டுரையை எழுத மேற்கொண்ட சிரமத்தை நீங்களாவது சற்று உணர்ந்ததில் மிக்க சமாதானம்.

    மிக சாதாரணமாக 'விமர்சனம்' என்று சொல்லப்பட்டிவிடுவதைப் பார்க்கும் போது அது சற்றி வருத்தத்தையே தருகிறது. மேலும் நீங்கள் படம் பார்த்திவிட்டவர் என்ற ரீதியில், இதை எழுத எடுத்துக்கொண்டது பெரிய சிரமம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். மற்றுமில்லாமல் சினிமாவை, எழுத்துவடிவமாக அல்லது ஒரு வாசிப்பு அனுபவமாக கொடுக்க முடியுமா? என்பதற்கான முயற்சி என்று தான் நான் கருதினேன். இல்லாமல் இது வெறும் காட்சிகளை மட்டும் விவரிக்கும் ஒரு திரைக்கதை புத்தகம் போலிருக்காது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும் ஒரு சினிமாவைப் பற்றிய கட்டுரையாயினும் அதில் எழுதுபவரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அதன் படியே தான் வழிநடத்தப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல 'நிழல்குத்து' ஐ சற்றே இக்கட்டுரை மூலம் காட்சிப்படுத்திப் பார்க்க உதவியிருப்பின், அல்லது அந்த திருப்தியின்மையின் காரணமாக அப் ப்டத்தக் காண தூண்டியிருப்பினோ, அதுவும் கடந்து ஒரு நேரவிரையமில்லாத வாசிப்பாக அமைந்திருந்தாலோ கூட போதும்.
    அது என்னை மேலும் இது போன்ற கட்டுரைகள் எழுதத் தூண்டும்.

    பதிலளிநீக்கு