இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஜனவரி, 2009

என் கருப்பிக்கு ஒரு காதல் கடிதம்

என் ப்ரியத்துக்குரிய‌ கருப்பிக்கு...

இப்படிப்பட்ட நீண்ட கடிதத்துக்கு வருந்துகிறேன். சுருக்கமாக எழுத நேரம் கிடைக்கவில்லை!

"மன்னிச்சுடு" ன்னு ஒரு வார்த்தைல சொல்றது அநாகரிகமாதான் இருக்கு... என்ன செய்யட்டும்...?

அதுக்குள்ள இப்படி நடந்திருக்க வேண்டாம். என்ன ஒரு ஒன்றரை வருஷம் கூட இருக்காது இல்ல...Since we started getting along together...?

நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு 'ராட்டை' மூலமா தான் உன்ன எனக்கு தெரியும். உன்ன முன்னாடியே பாத்தும் இருந்தேன். அப்போ இருந்த நெருக்கடில யோசிக்கல. உன்ன என்னுடனே வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டேன். You are not my type. ஆரம்பத்துல உம்மேல பெரிய ஈடுபாடு இருக்குலன்றது உண்மை தான். அது உனக்கும் தெரியும்.

ஆனா இந்த ஒன்றரை வருஷத்தில் எந்த நிமிஷத்துல எனக்கு அப்படி தோனுச்சுன்னு தெரியல. Suddenly I‘ve fallen in love with you. சினிமாத்தனமா தான் இருந்தது, But it was true, you were becoming a part of me. காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பிவிடுறதிலிருந்து...ராத்திரி தாலாட்டா உன்னொட குரலை கேட்டு தூங்குற வரைக்கும் நாம ஒன்னாவே தான் இருந்த மாதிரி இருக்கு. அதுவும் மின்சார ரயில்ல காலைலயும் மாலைலயும் அந்த 1 மணிநேரம் கையைப் பிடித்தபடியே பயணிப்பது...என்ன ஆனாலும் கையை மட்டும் நீ விடாம பிடித்தபடி வருவ. எனக்கு வலித்தாலும், வேர்த்தாலும் கூட விலக்கிக்கொள்ள நினைத்ததே இல்லை. எங்க விட்ட நீ?. நான் மெல்ல உன் நகங்களின் கூர்மையான விளிம்புகளை வருடியபடி வருவேன்....நீ எனக்கு மட்டும் கேட்குற மாதிரி சன்னமான குரலில் நீ பாடிட்டு வருவது... ப்ச்ப்...அதை விட சுகம் வேறு இல்லை.!

நண்பர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஞாபகப்படுத்துவ, சீசன் டிக்கட் ரென்யூ பண்ணச் சொல்லிஅனுப்புவ... நீ இல்லாம எங்க என்னால இயங்க முடியாதோன்னு கூட தோணியிருக்கு. ஒருவேள அதுதான் இப்போ நடந்துகிட்டு இருப்பதோட துவக்கமோ?

ஒரு நாள் நீ இல்லைனா கூட அன்றைக்கு முழுக்க ஸ்தம்பிச்சு போயிடுது. அப்பவெல்லாம் உன்ன பத்தின நினைப்பு தான். இந்த நேரத்துல நீ என்ன பண்ணீட்டு இருப்ப ன்னு தான் யோசிச்சுட்டு இருப்பேன். ஆனா அது எப்படி உனக்கு தெரியும். நீ பக்கதுலயே இருக்கும் போது நீ இருப்பது போல கூட நான் காட்டிகிட்டதே கிடையாதே!.

நீ என்னுடன் இருப்பதை விட துரத்தில் எங்காவது உனக்குத் தெரியாமல் உன்னைப் பார்க்கும் போது, என் கையைப் பிடித்தபடி மளிகை ஜாமான்கள் வாங்கும் போது, யாருமற்ற வார இறுதி மதியவேளையில் உன் அமைதியான உறக்கத்தின் போது... உன்னைப் பார்த்த படியே ரசித்துக் கொண்டிருப்பேன். ச்சே..! என்ன அழகு நீ..!?

உனக்கு உடம்பு சரியில்லாத நேரங்களைப் போல் எனக்கு வேதனை அளிப்பது வேறெதுவும் இல்லை. அவசியமற்று உன்னுடைய நிரந்திர பிரிவை எண்ணி பயப்படுவேன். மீண்டும் அதே மிடுக்கோடு நீ எழுந்து வரும் ஒவ்வொரு முறையும் புதுசா பிறந்தவனாகவே நினைக்கிறேன்.

கொஞ்சம் குண்டு தான் நீ...ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத் துடங்கியது. உன்னுடைய டார்க் காம்ப்ளெக்ஷன் தான் உன்னோட மெருகு... உன்னை ஒவ்வொரு அங்குலமும் காதலித்தேன் என்பது தான் உண்மை.

எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது... அன்னிக்கு அது நடந்திருக்க வேண்டாம். நீ அங்க இருந்திருக்கக் கூடாது. பெரிய தப்பு... நான் வேர கொஞ்சம் ஓவரா தான் இருந்தேன். அன்னிக்கு கார்க்கி வீட்டுக்கு வந்திருந்தான். எப்போதும் நீ தூங்கிய பிறகு தான் சரக்கடிப்பது தான் வழக்கம். பாலுவிடம் கத்துகிட்ட நல்ல பழக்கம் அது. ஆனா அன்னிக்கு பகல்லையே சரக்கு... என்ன செய்யுறது? வெளிய சித்திரை மாத சென்னை வெயில். அவன் வேற பெங்களூர்லயே பொறந்து வளந்தவன் மாதிரி வெளிய போகமுடியாது, செத்துருவேன்னு உயிரெடுக்கத் தொடங்கியிருந்தான். ஏற்கனவே கடுப்புல தான் இருந்தேன். நீ யாரோ கூப்பிடுகிறார்கள் என்று உள்ளே வந்தாய். அந்த சமயம் ஏதோ வாக்குவாதம் எக்குத்தப்பாக போய்... நான் ஏதோ பல தொந்தரவுகளை மனசில் வச்சுட்டு...ஒரு பாட்டிலை எடுத்து அவன் மேல் வீசிவிட்டேன்! அது அவன் தலைமுடியை உரசிக்கொண்டு பின்னால் சென்று ஏ.சி யில் பட்டு கீழே விழுந்தது. இதைப்பார்த்து நடுங்கியபடி அவன் பின்னால் நீ இருந்ததை நான் கவனிக்கவில்லை. அடுத்து அந்த மெட்டல் சிகரட் கேஸ்... அதன் விளிம்பு அவன் நெத்தியில் பட்டு லேசான காயம் ஏற்பட்ட போதும் எனக்கு திருப்தி ஏற்படாததால் எழுந்து அவனைத் தள்ள எத்தனித்தேன். அவன் பாதுகப்புக்காக நகர்ந்தது...நான் உன்னைத் தள்ளிவிட நேர்ந்தது. பின் சுவற்றில் நன்றாக மோதிக்கொண்டாய். தலை பக்கவாட்டோடு சுவற்றோடு நன்றாக மோதி பலத்த சப்தம் கேட்டது. அப்படியே சுருண்டு விழுந்து விட்டாய். ஒரு சப்தம் இல்லை...அழுகை இல்லை...!

அப்பவும் உடனே நான் உன்னைத் தூக்கவில்லை... அவன் முன்னாடி என்னோட weakness சைக் காடிக்க விரும்பல. அவனுக்கு எல்லாம் தெளிந்துவிட்டது. "என்னன்னு பாரு" என்றான்.

"எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றேன்.

பிறகு சிறிது நேரம் கழித்து உன்னை எடுத்து இருத்தினேன். தலையில் லேசான சிறாய்ப்பு. கை ஊன்றியதில் சதை சற்று உரிந்துவிட்டிருந்தது. காலில் உடைந்த பாட்டில் பட்டு பிளந்துவிட்டிருந்தது. பெருத்த அவமாணமாக எனக்கு இருந்த போதிலும் சற்றும் நான் வெளிக்காடிக்க வில்லை. உயிருக்கு ஏதாவது ஆபத்தாகிவிடுமோ என்று ஒரு வினாடி பயந்தது உண்மை தான்.

சாயங்காலம் நானே காலில் கட்டு போட்டுவிட்டுக் கொண்டிருந்தேன். டாக்டரிடம் போகவில்லை. தேவையில்லாமல் ‘எப்படி ஆச்சு’ என்ற தர்மசங்கடமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். மருந்து இட்டுவுடும் அவ்வளவு நேரமும் நீ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் பயந்து கொண்டிருந்த நிரந்திர பிரிவு இது தானோ என்று பயந்தேன்.

நெற்றியில் ஏற்பட்ட சிறாய்ப்பு காயம் கூட உன்னுடைய அழகைக் கூட்டுவதாகத் தான் இருந்தது. ஆனால் முன் போல உன்னோடு இப்போது என்னால் பழக முடியவில்லை. நான் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று எனக்காக காத்துக்கொண்டிருந்தது. ஒரு வாரம் கழித்து தான் எனக்கு அது தெரிய வந்தது. நடந்த சம்பவத்தால் நீ ஒரு காது கேட்கும் திறணை இழந்திருந்தாய். குற்றவுணர்ச்சி என்னைத் தின்று கொண்டிருந்தது. பேசாமல் உன்னை உன் உறவினர்கள் வீட்டுக்கு போகச்சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு ..ச்சீ... அவளை ஊனமாக்கிவிட்டு வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டான் என்று நினைக்க மாட்டார்கள்?.

சரி...உன்னுடைய சம்மதத்துடன் டைவர்ஸ் வாங்கிக்கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். நமக்கு இதெல்லாம் ஒத்து வராது... நீ எவனாவது நல்லவன் கூட போய் நல்லபடியா இருக்கட்டும். உன்னை பூ போல் பார்த்துக்கொள்ளட்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் நீ அதற்கெல்லாம் அவசியமற்றது போல, எதுவுமே நடக்காதது போல செயல்பட்டுக்கொண்டிருந்தாய். இது எனுடைய ஈகோவை பாதித்தது. உன் ஈகோவின் வெளிப்பாடு தான் இந்த நிபந்தனையற்ற அன்பு என்று நான் நினைத்தேன்.

அதன் பிறகு நீ செய்யும் ஒவ்வொரு சின்ன காரியமும் எனக்கு அளப்பரிய சாதணையைப் போல வரவேற்க ஆரம்பித்தேன். இப்படியே சில மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலை எனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எப்போது உன்னுடைய சுயத்திற்கு வந்து என்னுடைய நிஜத்தை சந்திக்க நேரிடுமோ என்று அச்சத்திலே இருக்கவேண்டியதாகிவிட்டது. அந்த ஒரு நாள் சம்பவத்திற்கு எனக்கு இப்படி பல மாத தண்டணையா...? அடிப்பாவி மகளே…! உன் மீது கோபமாக வந்தது..
சில நாட்களில் உன்னுடைய செயல்கள் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த துடங்கியிருந்தது. அது உனக்கும் தெரியும். உன்னையே எல்லாவற்றிற்குமாய் நம்பியிருந்த என்னை ஒரு அகதியாக நிராகரிக்கத் துடங்கி விட்டாய்.

முக்கியமான கலந்துரையாடலுக்கு காலை 9 மணிக்கு போகவேண்டுமென்று தெரிந்தும் உன்னால் அதை தவரவிட நேர்ந்தது. முக்கியமான நேரங்களில் உன்னுடைய அசட்டையால் பல பேர் முன்னிலையில் அவமானப்படும்படியாக ஆனது. இப்போதெல்லாம் ரயிலில் பாடுவதை நீ நிறுத்திவிட்டாய். ரயில் சத்ததை மட்டும் கேட்டபடி ஜன்னலையே வெறித்தபடி வரும் வெறுமையான காலைகளும். இரவுகளில் வீடு திரும்புகையில் அருகருகில் உறங்கியபடி வருவது அர்த்தமற்றதாக இருந்தது. அக்கரையுள்ள நண்பர்கள் சிலர் "இப்படி அவஸ்த பட்றக்கு பேசாம பிரிஞ்சுடுங்களே" ன்னு கூட சொனார்கள்.

உன்னுடைய நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. உன் வர்கதுக்கே உண்டான இயல்பாயிற்றே அது!. சுனாமி வருவதைக் கூட கணித்து விடலாம். ஆனால் நீங்கள் எப்போது சிரிக்கிறீர்கள், எப்போது சீறுவீர்கள், எப்போது அழைப்பீர்கள், எப்போது நிராகரிப்பீர்கள், எப்போது பாடுவீர்கள், எப்போது அழுவீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம். அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி. உங்களைப் புரிந்துகொள்ளுவதற்கான நேரத்தையும் திறமையையும் சரியாக பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் என்ன...எப்பவோ எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடித்திருக்கலாம், நிலவில் குடியேறியிருக்கலாம், Customized குழந்தை பெற்றுக்கொள்ள Computer Program எழுதியிருக்கலாம், கஷ்மீர்,தமிழீழம்,காசா, பாலஸ்தீன்,லெபனான் போன்ற பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.

சரி சரி... மன்னித்துவிடு.. இப்போது அந்த பேச்சுக்கெல்லாம் போக வேண்டாம். நான் சொல்ல வந்த விஷயம்..."இந்த சில வார இடைவேளையில் உன்னுடைய absence, வாய்க்கப்பட்ட தனிமை, புத்தாண்டுகாலம், பொருளாதார சரிவு போன்ற காரணத்தால் கிடைக்கப்பெற்ற சில நல்ல வாய்ப்புகள்...
நல்லா யோசித்து பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்... உன்னிடம் சொல்ல பதட்டமாக தான் இருக்கு... இருந்தாலும் உனக்கு சொல்லாமல் எப்படி. அவ‌ உன்னவிட கொஞ்ச‌ம் உய‌ரம் (உனக்கு தெரியாதா...எனக்கு கொஞம் உய‌ரமா இருந்தா பிடிக்கும்னு). உன்னைவிட கொஞ்சம் ஸ்லிம். ஆனால் உன்னைப்போல அழகு இல்ல டி!.

உன்னை அதுக்காக வேறு யாரவது வீட்டில் இருக்கச் சொல்லவோ, இல்ல வாழாவெட்டியா உன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பவோ எனக்கு மனசு வர்ல. நீ எப்பவும் என் கூட இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் குடுக்கும். இப்போ உனக்குத் தேவை நல்ல ஓய்வு. சிறந்த பாதுகாப்பு. இது இரண்டையும் நான் கடைசி வரைக்கும் கொடுப்பேன். நீ தான் புதுசா வர்றவளுக்கு என்னப் பத்தி சொல்லனும். என்னுடைய ருட்டீன் எல்லாம் தெரிந்திருக்க ஞாயமில்லை. அப்படி பாக்காதே...வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். ஆமா உண்மை தான்...


நான் புது மொபைல் வாங்கப் போறென்... Photo கீழ இருக்கு நல்லா இருக்கான்னு பாத்து சொல்லு..என்றும் அன்புடன்.
நான்.

கருப்பியின் தற்போதைய புகைப்படம்: