இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

ஆசை முகம் மறந்து போச்சே!!

[பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் .]

********

பக்தி-இசை மற்ற இசை வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. Divinity க்கு 'தெய்வீகம்' சரியான சொல்லானால், அந்த தெய்வீகம் இசையில் கிடைக்கப்பட வேண்டும். அது காதுகளால் மட்டும் கேட்கப்படாமல் வாசனையாகவும், தொடுதலாகவும், மன நிம்மதியையும் கொடுப்பதாக இருக்கவேண்டும். மிகவும் சிறந்த குரல் வளம் மிக்கவராக இருப்பினும், அவருக்கு மேல்கூறிய அம்சங்கள் இருக்கவேண்டுமென்பது அவசியம் இல்லை. கர்ணாடக இசை பெரும்பாலும் இறை போற்றுதல் வடிவத்திலேயே இருப்பதால், க.இசையையும் நான் பக்தி இசையாகவே வரையறுக்கிறேன்.

அப்படி தெய்வீகம் நிறைந்த குரல் - யோசிக்காமல் சொல்ல வேண்டுமானால் K.J.யேசுதாஸ் அவர்கள். டி.எம்.எஸ் -சின் முருகன் பாடல்களைக் எப்போது கேட்கும் போதும் திருநீறு மணப்பது போலவும், ஊதுவத்தி புகை வருவது போலவும் ஒரு பிரம்மை உண்டாகும். இந்த முரணை உடைத்து எப்போதும் எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள். "பளிங்குனால் ஒரு மாளிகை..." குரலில் உள்ள 'கிக்', "மாரியம்மா...கருமாரியம்மா..உன்னை வணங்கி நின்றோம் கருமாரியம்மாஆஆ" எனும் போது உள்ளமெல்லாம் ஹார்பிக் போட்டு துடைத்தது போல் சுத்தமாகி விடும். (இங்கு 'ஆஆ' என்பது செய்யுளிசை அளபடை).

அதே போல் தான் பக்திப் பாடல் எழுதுவதும். சிறந்த கவிஞர்களாளும் அதில் வெற்றிபெற முடியாது. மணிக்கணக்கில் யோசித்து போட்ட வரிகள் கூட பித்துக்குளியின் ஒரு'கொஞ்சிக்கொஞ்சி..கொஞ்சிக்கொஞ்சி..' (பச்சை மயில் வாகனனே) வுடன் தோற்றுப் போய்விடும். அதுதான் விந்தை.

பக்திப் பாடல்களுக்கென்று ஒரு 'சிறுபிள்ளைத்தனம்' வேண்டும், அல்லது பரிபூர்ண ஒப்புவித்தல், குறந்தபட்சம் பைத்தியக்காரத்தனமாவது வேண்டும். அறிவு சார்ந்து எழுத முற்படால் அது குப்பைத்தொட்டிக்கு தான் போகும். வைரமுத்துவால் எப்போதும் ஒரு பக்திப் பாடல் எழுதிவிட முடியாது. அவர் எழுதிய "வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி…ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி" பாடல் பல்லவிகள் மிகவும் சம்பரதாயமாக உயிரற்று இருக்கும். இளையராஜா உயிர்கொடுத்து காப்பாற்றியிருப்பார். என்னுடைய இந்த நம்பிக்கைக்கு கொஞ்ச‌ம் முரணாக நான் ரசித்த வை.மு வின் பக்திப்பாடல் 'அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினாரே, வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் மன்னவன் மின்னினானே..'.அதைப்போன்ற அறிவு கொண்டு எழுத முயற்சித்த வரிகள் தான் இவையும் "கன்னிச்சாமி புதுசா மலை ஏறும் நாளப்பா..கருப்புச் சட்ட போட்ட ஆத்திகன் நானப்பா". மலையாள பக்திப்பாடல்களில் உள்ள அந்த சிறு பிள்ளைத்தனத்தையும் சமர்ப்பணத்தையும் நவீண தமிழ் பாடல்களில் சில நேரம் பார்க்க முடிவதில்லை. ஒரு மலையாள பக்திப்பாடலில் வரும் வரிகள் இவை,

"முத்தி (பாட்டி) விளித்தால் விளி கேட்கும்
ஒரு முத்தச்சன் (தாத்தா) னானென்டே அய்யப்பன்...
கெட்டிப் பிடிச்சால் முத்தம் தரும் ஒரு
பெற்றன்னை யாக்கும் என் அய்யப்பன்..."

என்று தெய்வத்தை சகமனிதர்களாக பாவித்து பாடுகிறார்கள்.

மற்றுமொரு பாடலில்,

"ராதையின் ப்ரேமம் உனக்கு பிடிக்குமா - இல்லை
என் ராகம் உனக்கு பிடிக்குமா…
சொல் உனக்கு எது மிகவும் இஷ்டம்…
நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.
இது உன் இரகசியமாகவே இருக்கும்
"

என்று உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் பாடல்கள் பெரும்பாலும் 'போற்றி'களாகவும், புலம்பல்களாகவுமே இருக்கின்றன (திருத்தங்கள் வரவேற்கிறேன்). அப்படி சற்று முரண்பட்டாலும் அறிவு சார்ந்த எழுத்தாக மாறிவிடுகிறது, இல்லை கமர்ஷியல் சினிமா பாடல்கள் போலாகிவிடுகின்றன. ஒரு காலகட்டத்தில் இப்படி சினிமா பாடல்கள் பக்திபாடல்களாக கரோக்கி ரெக்கார்டிங்கில் வந்து கொண்டிருந்தது. 'ரக்கம்மா கையத் தட்டு...' பாடலை 'ஐயப்பா...சரணம் சொல்லு...' என்று மார்கழி மாசத்தில் கோவில் ஸ்பீக்கரில் நாரசமாக ஒலிக்கும். அந்த இசையைக் கேட்டாலே எனக்கு ரஜினிகாந்தும், கீதாவும், அந்த Skirt டை வாளிப்பாக Lift செய்து ஆடும் அந்த பெண்மணியும் தான் நினைவுக்கு வருவார்கள். (இங்கு 'தூக்கி' என்று எழுதுவதின்/அர்த்தமக்கிக்கொள்ளப் படுதலின் அபாயம் கருதியே 'Lift' என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறேன். )

தமிழில் நல்ல பாடல்கள் இல்லை என்பதைக் காட்டில், அப்படி சிறந்த பாடல்கள் பல வெளிச்சத்தில் இல்லை, அல்லது குறிப்பிட்ட சில வட்டங்களிலிருந்து வெளிவருவதில்லை என்பது தான் உண்மை. அதற்கு முக்கிய காரணம் நான் முன்பு குறிப்பிட்டது போலவே இறைவழிபாடும் சங்கீதமும் பிணைக்கப்பட்டிருப்பது தான். நாத்திகத் தத்துவம் அதிகம் புரையோடும் நம் சமுதாயத்தில் பக்தி இசை ஒரு இசை வடிவமாக பார்க்கப் படாமல், அது வழிபாட்டு முறையாக அர்த்தமாக்கிக்கொள்ளப் படுகிறது.

ஊத்துக்காடு வெங்கட கவி போல நா.முத்துக்குமாரோ, தாமரையோ, வைரமு..(சரி வுடுங்க) ரொமேன்டிக்காக எழுத முடியாது.

"பாலனென்று தாவி அனைத்தேன் - அவன்
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி இவன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
(இதை) நாலு பேர்கள் கேட்கச் சொன்னால் நாணம் மிக ஆகுதடி
தாயே யசோதா..!
"
என்கிறார்.

படைப்பாளி மட்டிலும் மற்றுமொரு முரணான அதிர்ச்சி தரும் பாடல் ஒன்று உண்டு. மிகவும் சாணக்கியத்தனமான அரசியல்வாதி என்று அறியப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டதும், மிக எளிமையான சமர்ப்பணத் தன்மைமிக்க பாடலாக எல்லோராலும் விரும்பப்படும் பாடல்

"குறையொன்றும் இல்லை... மறைமூர்த்திக் கண்ணா! குறையொன்றும் இல்லை கண்ணா!"

எழுதியவர்: இராஜகோபாலச்சாரி (ஆமாம்...ராஜாஜி தான்), எழுதிய இடம் ம‌த்திய‌ சிறைச்சாலை.

********

ஒரு ஆறு மாதத்திற்கு முன் O.S.அருண் -னின் Bhajans for You என்ற இசத்தட்டு கிடைத்தது. எனக்கு கர்ணாடக... இல்லை..இல்லை... சங்கீத அறிவே இல்லை என்ற அறிமுகத்தோடு தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் எதுவாக இருந்தாலும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருந்தால் அது நல்ல இசை தான் என்று நம்பினேன். இப்போதும் அதிகமாக கேட்க்கப்படும் வரிசையில் ஓ.எஸ்.அருண் தான் இருக்கிறார்.


பெரும்பாலும் கர்ணாடக இசையைக் கேட்க நேரும் போது, உறுத்தும் விஷயம்: பொறுமையிழக்க வைக்கும் ஆலாபனை. பாலமுரளி கிருஷ்ணா 'எந்தரோ மஹானு பாவுலு...' பாடுவதற்குள் 15 நிமிடம் ஆலாபனை பன்னிவிடுவார். அதற்குள் ஒன்றாவது எனக்கு தூக்கம் வந்துவிடும், அவர் விடும் அதிக இடைவெளிகளில் மற்ற சப்தங்கள் ஆக்கிரமிக்க துடங்கிவிடும், இல்லையேல் வீட்டில் துடங்கி என் அலுவலகமே வந்துவிடும். அருணிடம் அந்த பிரச்சனை இல்லை. நறுக்கென்று ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் பாடிப் பாடி ரெக்கார்டு கிழித்துவிட்ட பாடல்களையும் புதுப் பொலிவுடன் கொடுக்கிறார். இயல்பான பாடல் அல்லாமல் அதைப் Ornamentationனுடன் படைப்பாறலுடன் கொடுப்பது நல்ல விருந்தாக இருந்தது. பாடும் போது அவருடைய Body Language, பக்கவாத்தியஸ்தர்களுடன் Communicate பண்ணுவது, சிரித்த முகத்துடன் பாடுவது (சிலர் பாடும் போது பார்த்தால் நமக்கே பாவமாகவும் பயமாகவும் இருக்கும் ஏதாவது சீரியஸா ஆகிவிடுமோ...இதயம்-கிதயம் நின்று விடுமோ என்று!). தமிழ் நாட்டிலிருந்து பல வருஷங்கள் விலகியிருந்த போதிலும் தமிழ் உச்சரிப்பில் ட்ரேக்டர் விட்டு ஏற்றாமல், சுமுகமாக கையாண்டு இருக்கிறார். தமிழ் அல்லாது கன்னடம், ஹிந்தி எல்லா உச்சரிப்புமே அவ்வண்ணத்தில் இருப்பதுவே சிறப்பு. இந்த இசைத்தகடின் மூலம் 'அபங்' இசைவடிவம் அறிமுகமானது பெரும் பாக்கியம்.

மேலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, இவர் குறைந்த பக்கவாத்தியங்களையே விரும்புகிறார். 'கஜ கஜ' வென்று எல்லா பக்க வாத்தியஸ்த்தர்களுக்கும் வாய்ப்பு தரும் பொருட்டு சப்தமிகுதி ஏற்படுவதில்லை. இருக்கும் வாத்தியங்களே மிகவும் குறைந்த ஒலியிலே ஒலிக்கப்படுகிறது. குறிப்பாக "ட்வைங்ங்ங்...ட்வைங்ங்ங்..." என்று சில கச்சேரிகளில் உரக்க ஒலிக்கும் ஜால்ரா ஒலி மிகவும் குறைவாக இருக்கின்றது.


இந்த இசைக்கோவையில் எனக்கு பிகவும் பிரியமான பாடல் இதோ...

ஆசை முகம் மறந்து போச்சே!
பாடலாசிரியர்: மகாகவி பாரதியார்ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ? (ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் (ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி (ஆசை)

இதில் 'ஆசை முகம்' என்று அருண் துடங்குவதே அழகு. நமக்கே ஆசை வந்துவிடும். மீண்டும் அதே வரியில் 'மறந்து போச்சே!' என்பதில் அப்படியொரு சோகம்!.

"அதெப்படி உன் அன்பை மட்டும் இதயம் மறக்கவில்லை... உன் முகத்தை எப்படி அறிவு மறந்தது?" என்று கேட்பதில் ஒரு குற்றவுணர்ச்சி.

"நண்ணு முகவடிவு காணில் - அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்" என்னும் இடத்தில் ஒரு பூவைப் போல கையில் அபினையம் காட்டி அருண் புண்ணகைப்பது நல்ல Ornamentation.

"கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த கண்களிருந்து பயனுண்டோ" என்ற பாரதியின் கேள்வியும், அருணின் வர்ணனையும் "உண்மையிலியே பயன் இல்லை தான் போல! என எண்ண வைத்துவிடும்"

"இனி வாழும் வழியென்னடி தோழி" யில் இருக்கும் நிற்கதித் தன்மை நம்மைப் பாடலில் அப்படியே உருக வைத்து விடுகிறது.

"ஆசை முகம் மறந்து போச்சே" யில் இருக்கும் "ஆசை"யை வெவ்வேறு பாவனையில் அருண் பாடுவது கண்ணன் முகத்தை நினைவு கூற முயற்சிப்பது போலத் தோன்றும். இறுதியில் முடியாமல் "மறந்து போஓச்சே!!" (ம்ம்.சரியாக புரிந்து கொண்டீர்கள்) என்று சரணடைவதில் முடியும் பாடல் கொடுக்கும் அனுபவம் வார்த்தைகளில் வார்க்க முடியாது. இந்த பாடலில் சிறப்பு பாரதியாலா, அருணாலா இல்லை காதலாலா என்று எனக்கு தெரியவில்லை!.

சிலர் ராதைப் பாடல்கள் அல்லது கண்ணன் பாடல்கள் பெண்கள் குரலில் பாடிவதே உத்தமம் என்று வாதிடுவார்கள். சில பெண்பாற் பாடல்களை நித்யஸ்ரீயோ, சுதாரகுனாதனோ, சௌமியாவோ பாடும் போது கேட்பதை விட மகாரஜபுரம் சந்தானம் அவர்களோ, K.J.யேசுதாஸோ பாடக் கேட்கும் போது உயிருள்ளதாகவும் தாய்மை தழும்பியும் இருக்கின்றன. M.L.வசந்தகுமாரி அவர்கள் விதிவிலக்கு. அதனால் பாடலுக்கு பால்பேதமில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

முறையான சாஸ்திரிய சங்கீதத்தை கடைபிடிப்பவர்கள் O.S.அருணின் இலக்கண மீறல்களை பொருத்துக்கொள்ள மாட்டார்கள். அன்மையில் தீவிர க.இசை கலைஞரும் நண்பருமான ஒருவருக்கு அருண் பாடிய 'குறையொன்றும் இல்லை' போட்டுக் காண்பித்தேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு முகமெல்லாம் சிவந்து போய், கையில் தம்புராவைக் கொடுத்தால் என் மண்டையிலேயே போட்டுவிடுவார் போலிருந்தது...பாடலை கொன்று விட்டதாக வருத்தப்பட்டார். அதனால் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ளுதல் நலம்.

Mosebaer ரில் 50 ரூபாய் முதல் கிடைக்கும் இந்த இசத்தட்டு புதிய இசையை (அல்லது பழைய இசையை புதுமாதிரியக) கேட்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும் என்று நம்புகிறேன். .

********

3 கருத்துகள்:

 1. மீண்டும் ஒரு முறை தசாவதானி என்பதை நிரூபித்து விட்டீர்கள்....எந்த கட்டுக்குள்ளும் அடங்காத காற்றாய்...இந்த முறை கர்நாடக சங்கீதத்தின் பக்கம்.....

  O.S அருணை ஒரு நாள் அறிமுக படுத்தினீர்கள். அவருடைய அருமையான குரலை காட்டிலும் அவருடைய பாவனைகள் இன்னும் எனக்கு பளிச்சென்று ஞாபகம் வருகிறது. இந்த விசயத்தில் நான் ஒரு ஞான சூன்யம். எனக்கு பல புது விஷயங்கள் தெரிய வந்தது நன்றி..

  கர்நாடக சங்கீதத்தின் மேல் எப்போதும் தீராத காதல் எனக்குண்டு. அதனாலேயே கர்நாடகம் சங்கீதம் தெரிந்து என்னை ஏற்று கொள்ளும் மனபக்குவமுள்ள எந்த ஒரு பெண்ணையும் மணம் செய்ய காத்திருக்கிறேன் முதலில் வாய் பாட்டு கற்று கொள்ள விழைந்தேன். பொதுமக்கள் நலன் கருதி விட்டு விட்டேன் ...
  என்னை பொறுத்தவரை, எந்த ஒரு திறமை படைத்தவரை விடவும் மார்கழி மாத கச்சேரி செய்யும் இசை கலைஞர்கள் மேல் பெருமதிப்பு தோன்றும்.
  குறைந்த பட்சம் என் வாரிசுகள் மூலமாவது இந்த நிராசையை பூர்த்தி செய்து கொள்வேன்.

  பதிலளிநீக்கு
 2. தாயே எசோதா பாடல் மிகவும் பிடித்த பாடல்.
  // இந்த விசயத்தில் நான் ஒரு ஞான சூன்யம். எனக்கு பல புது விஷயங்கள் தெரிய வந்தது நன்றி..//
  எனக்கு எல்லாவகை பாடலும் பிடிக்கும் ஆனா அதுபத்தின அறிவு கிடையாது.
  நம்ம ராசாவோ திருவாசகம்,How to name it,Nothing but wind பத்திலாம் ஒரு வரிகூட சொல்லலையே.
  சிவமணிMahaleela இதையும் கேட்டு சொல்லுங்க.

  வழக்கம் போல அருமையான பதிவுங்க.

  பதிலளிநீக்கு
 3. அழகான பதிவு ப்ரவீன்...கார்த்திக் தந்த தொடுப்பினூடாக "ஆசை முகம் மறந்து போச்சே" மட்டும் கேட்டேன்.அருமையாக இருந்தது.

  என்ன ஆச்சர்யம்.நேற்று முன் தினம் தான் அலுவலகத்தில் நண்பரொருவர் சிவமணியின் "மஹாலீலா" வேண்டும் என்றார்.அதுவரை அப்படி ஒரு ஆல்பம் இருப்பதே தெரியவில்லை.தேடிப்பிடித்து கேட்டேன்.அதிலுள்ள "infinity" என்ற பாடல் மிகவும் பிடித்திருந்தது.ஓஷோவின் voice போனஸ்.அதையே கார்த்திக்கும் இங்கு குறிப்பிட்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு